ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், சுமார் 11 பேர் காயமடைந்ததாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் ஒரு நாள் கழித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யேமனில் உள்ள சவூதி தலைமையிலான கூட்டணிப் படைகள், ஞாயிற்றுக்கிழமையன்று ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் 4ஐ அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்று குறிவைத்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தன.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தது மட்டுமின்றி மேலும் பதினோரு பேர் காயமடைந்ததாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
கிங் காலித் சர்வதேச விமான நிலையப் பகுதிக்கு அருகே வந்த ஒரு குரூஸ் ஏவுகணையைச் சவூதி வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்து அழித்ததாகக் கூட்டணிப் படைகள் தெரிவித்தன.
பின்னர், நாட்டின் கிழக்கு மாகாணத்தில் ஒரு ட்ரோன் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், கமிஸ் முஷைத்தை நோக்கி ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிக்கப்பட்டதாகவும் அவை மேலும் கூறின.
திங்கள்கிழமை (12) அதிகாலையில் தெற்குப் பகுதியிலுள்ள அபஹா நகரிலும் அவசரக்கால எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது அந்த ஆபத்து நீங்கிவிட்டதாகச் சவூதி சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
சவூதி ஆதரவு யேமன் அரசாங்கத்திற்கு எதிராக யேமனில் தரைப்போர் நடத்தி வரும் ஹவுத்திகளுக்கு எதிராக சவூதி வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதல்கள் சவுதியின் பாதுகாப்புத் திறன்களில் உள்ள பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளன.
