இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்குச் சொந்தமான நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் (INTERPOL) சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பிடியாணையைப் பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்து வரும் விசாரணைகள் தொடர்பில் முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
2014ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
குறித்த நிதி, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் விளம்பர நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, ஊவா மாகாண சபைத் தேர்தலின்போது விநியோகிப்பதற்காக 12,000 டி-சேர்ட்டுகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிதி முறைகேடு காரணமாக அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
