“நெதன்யாகுவுக்கு மீண்டும் ‘நோ’ சொன்ன முகமது பின் சல்மான்!”: இஸ்ரேலை நிராகரித்த சவூதி அரேபியா; ஒரு விரிவான ஆய்வு.

Date:

ஹூதிகளுக்கு எதிரான போரில் தங்களோடு இணைந்துகொள்ளுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா ஊடாக விடுத்த கோரிக்கையை, சவூதி அரேபியாவின் முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மான் மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

சமீபத்தில் ‘ஹாரெட்ஸ்’ (Haaretz) நாளிதழ் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கையில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் சவூதி அரேபியாவை ஹூதிகளுக்கு எதிரான போரில் தங்களுடன் இணைத்துக் கொள்ள நெதன்யாகு முயற்சிப்பதாகவும், ஆனால் அதனை சவூதி அரேபியா முற்றிலும் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, ‘யெதியோத் அஹ்ரோனோத்’ (Yedioth Ahronoth) நாளிதழ் வெளியிட்டுள்ள மற்றொரு செய்தியில், யேமனில் உள்ள ஹூதிகள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா, இஸ்ரேலிய இராணுவத் தளபதி இயால் ஜமீருடன் (Eyal Zamir) விவாதித்ததாகவும், ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த ஜமீர், “இத்தகைய தாக்குதல்கள் ஹூதிகள் மற்றும் ஈரானுடனான மோதலை தீவிரப்படுத்தும்.

மேலும் அக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ள இஸ்ரேலிய தேர்தலை ஒத்திவைக்கவும் வழிவகுக்கும்” என எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா நேரடியாகப் போரில் ஈடுபடுவதைத் தவிர்க்கப் பார்க்கிறது; இஸ்ரேலிய இராணுவமோ தேர்தல் பாதிக்கப்படும் எனப் பயந்து போரைத் தவிர்க்க நினைக்கிறது.

ஆனால், நெதன்யாகு மட்டும் சவூதியின் ஆதரவோடு போருக்குள் நுழையத் துடிப்பது ஏன்? சவூதி அரேபியாவிடம் இஸ்ரேல் உண்மையில் எதிர்பார்ப்பது என்ன?

நெதன்யாகுவின் இந்த நகர்வை 4 முக்கிய கோணங்களில் பகுப்பாய்வு செய்யலாம்:

1. அரபு உலகடனான பாதுகாப்பு கூட்டாண்மை (Security Partnership):

இஸ்ரேல் முன்பு சவூதியின் அனுமதியின்றி ஹூதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது; தற்போதும் இராணுவ ரீதியாக தனியாகத் தாக்குதல் நடத்தும் வல்லமை அதற்கு உண்டு.

ஆனால், இம்முறை நெதன்யாகுவிற்குத் தேவை வெறும் இராணுவத் தாக்குதல் மட்டுமல்ல! சவூதியின் வாயிலாக இப்போருக்குள் நுழைந்தால், அது இஸ்ரேலின் தனிப்பட்ட தாக்குதலாகப் பார்க்கப்படாது.

மாறாக, மிகப்பெரிய அரபு-இஸ்லாமிய நாட்டுடன் இணைந்து ஒரு பொதுவான எதிரியை எதிர்கொள்ளும் “அரபு-இஸ்ரேலிய பாதுகாப்பு கூட்டாண்மை” ஆக உலகிற்குச் சித்தரிக்கப்படும். இது நெதன்யாகுவிற்குப் மிகப்பெரிய அரசியல் வெற்றியாக அமையும்.

2. இஸ்ரேலியத் தேர்தல் அரசியல்:

போர் விரிவடைந்தால் அக்டோபர் 27 தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார். நெதன்யாகு இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, “அரபு நாடுகளுடன் புதிய கூட்டணியை உருவாக்கும் நாயகன்” எனத் தனது வாக்காளர்களிடம் காட்ட நினைக்கிறாரா? அல்லது, பிராந்திய போரைச் சாட்டாக வைத்துத் தேர்தலை ஒத்திவைக்கும் திட்டத்தில் இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன.

3. சவூதி-இஸ்ரேல் உறவு சீராக்கம் (Normalization) & IMEC திட்டம்:

இந்தியாவை அரபு வளைகுடா மற்றும் சவூதி, ஜோர்டான், இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவுடன் இணைக்கும் IMEC (India-Middle East-Europe Economic Corridor) பொருளாதாரப் பாதை திட்டம் தற்போது முடங்கியுள்ளது.

ஹூதி எதிர்ப்புப் போரைக் காரணியாக வைத்து, ரியாத்துடன் பாதுகாப்பு மற்றும் அரசியல் வழிகளைத் திறந்து, முடங்கிக்கிடக்கும் ராஜதந்திர உறவு சீராக்கம் மற்றும் IMEC திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க நெதன்யாகு திட்டமிடுகிறார்.

4. பரஸ்பர அரசியல் நன்மைகள் (The Political Symbiosis):

இங்கே ஒரு விசித்திரமான முரண் நிகழ்கிறது. ஹூதிகள் சவூதியின் விமான நிலையங்கள் மற்றும் பொருளாதார மையங்களைத் தாக்குகிறார்கள். அதேநேரம், நெதன்யாகு சவூதிக்கு இராணுவ உதவி அளிக்க முன்வருகிறார்.

ஹூதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, சவூதிக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு தேவை என்ற எண்ணத்தை உருவாக்க நெதன்யாகு முயல்கிறார்.

ஹூதிகளின் பின்னால் மறைமுகமாக இஸ்ரேலிய தொடர்புகளும், ஊடகப் பிரச்சாரங்களும் இயங்குவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சவூதியை இஸ்ரேலுடன் கைகோர்க்க வைப்பதே இதன் இறுதி இலக்காகும். அதாவது, ஹூதிகளின் ஒவ்வொரு ஏவுகணையும் இஸ்ரேலின் பெயரிலும், இஸ்ரேலின் ஒவ்வொரு அழைப்பும் ஹூதிகளின் பெயரிலும் இயங்கும் ஒரு “நாடகம்” இங்கு அரங்கேறுகிறது!

சவூதியின் ‘நோ’ (NO) உணர்த்தும் செய்தி என்ன?

சவூதி அரேபியாவின் இந்த “நோ” என்பது, வெறுமனே இஸ்ரேலிய விமானங்கள் தங்களது வான்பரப்பைப் பயன்படுத்துவதற்கான மறுப்பு மட்டுமல்ல!
யேமன் போரை ஒரு பாலமாகப் பயன்படுத்தி நெதன்யாகு ரியாத்திற்குள் நுழைவதையும், உறவு சீராக்கத்தைக் திணிப்பதையும், பிராந்திய அமைப்பைத் தன் கைக்குள் கொண்டுவருவதையும் சவூதி திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இஸ்லாமிய உலகிற்கு இப்போதைய மிகப்பெரிய வெற்றி என்னவென்றால், முஸ்லிம்களின் இரத்தத்தால் கறைபடிந்த எந்தவொரு அசுத்தமான கரங்களின் (நெதன்யாகுவோ அல்லது அமெரிக்காவோ) உதவியும் இன்றி, ஹூதிகள் சுத்தமான முறையில் தோற்கடிக்கப்படுவதே ஆகும்.

சவூதி அரேபியா உறுதியாக நிற்கும் இந்த நிலைப்பாடு, பிராந்திய அரசியல் சதுரங்கத்தில் நெதன்யாகுவின் திட்டங்களுக்குப் பலத்த அடியாக விழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...

உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில்...

நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து...