மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் கடற்படை லெப்டினன்டுமான யோஷித ராஜபக்ஷ, பிரித்தானியாவில் உள்ள ‘ராயல் நேவி ட்ரெய்னிங் கல்லூரி’யில் ‘Royal Navy Young Officers Course’ பயிற்றுவிப்புப் படிப்பை மேற்கொள்வதற்காக அரசாங்க நிதியிலிருந்து 24,536 பிரித்தானிய பவுண்டுகள் செலுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை ( 15) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில், முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் டிராவிஸ் சின்னையா சார்பில் ஆஜரான கடற்படைப் பிரதிநிதி ஒருவர் சாட்சியமளித்தபோதே இத்தகவல்கள் வெளிவந்தன.
யோஷித ராஜபக்ஷ இந்த வெளிநாட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்காக, 2014 மே 19 அன்று கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததாக சாட்சி குறிப்பிட்டார்.
கடற்படையில் 9 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் யோஷித ராஜபக்ஷ சம்பளம் மற்றும் படிகளாக மொத்தம் ரூ. 5,159,626.37 பெற்றுள்ளதாக கடற்படை கப்டன் நுவன் துஷார அரங்கல சாட்சியமளித்தார்.
அவர் 2006 டிசம்பர் 14 முதல் 2017 பிப்ரவரி 28 வரை கடற்படை லெப்டினன்டாகப் பணியாற்றியுள்ளார் (அவரது சேவை 2016 பிப்ரவரி 28 அன்று இடைநிறுத்தப்பட்டது). இவரது மாதாந்த அடிப்படைச் சம்பளம் ரூ. 16,390 ஆகும்.
ராஜகிரிய மற்றும் பம்பலப்பிட்டி பகுதிகளில் 2012 ஆகஸ்ட் 1 முதல் 2013 ஆகஸ்ட் 29 வரையான காலப்பகுதியில் முறைகேடாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 735 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களின் ஆதாரங்களை விளக்கத் தவறியமை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர் மீது இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை அக்டோபர் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 11 அரசுத் தரப்பு சாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
