மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் மற்றும் இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் பதில் தூதுவர் ஆகியோருக்கு இடையிலான நட்புறவுச் சந்திப்பொன்று அண்மையில் தூதரகத்தில் நடைபெற்றது.
இந்த சுமுகமான சந்திப்பின் போது, இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக நிலவி வரும் வரலாற்று ரீதியான மற்றும் நெருக்கமான இருதரப்பு நட்புறவு உயர்வாகப் பாராட்டப்பட்டது.
பரஸ்பர நலன்களுக்காக இந்த இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்காலத்தில் மத மற்றும் கலாசாரத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்தக்கூடிய புதிய ஒத்துழைப்புத் திட்டங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள பல்வேறு உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் சவால்கள் குறித்தும் இரு பிரதிநிதிகளுக்கும் இடையே பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இதன்போது, அண்மையில் சவூதி அரேபியாவின் விமான நிலையம் ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தனது பலத்த கவனத்தைச் செலுத்திய பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் , இது தொடர்பில் சவூதி அரேபியாவின் பதில் தூதுவரிடம் தனது ஆழ்ந்த கவலையையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
