தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் இன்று (13) தாழமுக்கப் பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு இலங்கையிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
