இலங்கையின் இயற்கை தேசிய பாரம்பரியமாக கருதப்படும் ‘கவந்திஸ்ஸ’ (Kawanthissa) என்ற யானையின் இறப்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்ற சிறப்புத் தெரிவுக் குழுவொன்றை (Special Parliamentary Select Committee) நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் பிரேரணை ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட இந்தப் பிரேரணை இன்று (23) சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
கவந்திஸ்ஸ இறப்புக்கான பின்னணி மற்றும் சூழ்நிலைகளைக் கண்டறிதல். தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றியுள்ளனரா என்பதை ஆராய்ந்து, யானையின் இறப்பிற்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தல்.
இந்த விவகாரத்தை அரசியல் தலையீடுகள் இன்றி நடுநிலையாகக் கையாள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவைப்போல, முன்மொழியப்பட்டுள்ள இந்தத் தெரிவுக் குழுவும் அரசு மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டுத் தலைமையில் (Joint Chairmanship) அமைக்கப்பட வேண்டும் எனச் சஜித் பிரேமதாச யோசனை தெரிவித்துள்ளார்.
மேலும், கவந்திஸ்ஸவின் இறப்பு குறித்து விசாரணை நடத்துவதுடன் நின்றுவிடாமல், நாட்டில் எஞ்சியுள்ள யானைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
