யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு மத்தியில் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள், சவூதி அரசாங்கம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான விமான சேவைகளும் தற்போது இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ள சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், உறுதிப்படுத்தப்படாத செய்திகள், காணொளிகள் அல்லது சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மாத்திரம் நம்புமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜெட்டாவிலுள்ள இலங்கைத் துணைத் தூதரகம் என்பன வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
தூதரகச் சேவைகள் தொடர்பான உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குத் தூதரகத்தின் 0549477567 என்ற அவசர அழைப்பு இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.
சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் யேமனின் ஏடன் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மீது நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள் தமது விமானச் சேவைகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்தன.
சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மொரோக்கோ மற்றும் அல்ஜீரிய நாடுகளைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலில் சவூதி அரேபிய விமான சேவையின் விமானி ஒருவரும் உயிரிழந்தார்.
அத்துடன், கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான விமான சேவைகளும் தற்போது இயங்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
