யாழ்ப்பாணம் நல்லூரில் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் திலீபன் என அழைக்கப்படும் இராசையா பார்த்தீபனின் சிலை நிறுவப்பட்டமை தொடர்பில், அரசியல்வாதிகள் உட்பட 14 பேரிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (21) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிலையை நிறுவுவதற்கான நிதி வழங்கியமை, நிர்மாணித்தமை, அதனைப் பிரபலப்படுத்தியமை மற்றும் சிலை திறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தமை தொடர்பில் சந்தேகிக்கப்படும் நபர்களிடமே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், திலீபன் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த சிலையைப் பொலிஸார் பொறுப்பேற்று, வழக்குப் பொருளாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திலீபனின் 39ஆவது நினைவு தின நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளான செப்டம்பர் 27ஆம் திகதி, யாழ்ப்பாணம் திலீபன் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதியில் இருந்து சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளை ஊக்குவிப்பது இலங்கைச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், சிலையை அகற்றுவதற்கு முன்னர் பொலிஸார் நீதிமன்றத்தில் விடயங்களை அறிவித்திருந்ததாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த திலீபன் உயிரிழந்தார்.
