சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையர் சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் கருணை காட்டி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்துத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனத் ஜெயசூரிய:
“இலங்கையர்களாகிய நாம் நமது மதம் அல்லது இனப் பின்னணியைக் கடந்து அனைவரும் ஒன்றாக நிற்கிறோம். நமது சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதநேய அடிப்படையில் தயவுகூர்ந்து பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபிய அரசாங்கத்திடம் நாங்கள் தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.”
தனது இந்தப் பதிவில், சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் மற்றும் சவூதி வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வக் கணக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் முன்னணி விளையாட்டுப் பிரபலங்களில் ஒருவரான சனத் ஜெயசூரியவின் இந்த மனிதநேய வேண்டுகோள், அனோஜனை மீட்கத் திரண்டு வரும் இலங்கை மக்களின் குரலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத் தருவதற்கான இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
