இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் காற்றின் தரம் இன்று (19) ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் (CEA) AirShare தேசிய காற்றுத் தரக் கண்காணிப்பு வலையமைப்பின் தரவுகளின்படி, இன்று காலை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சிவப்பு நிறக் குறியீட்டில் பதிவாகியுள்ளது.
இது குறித்த பகுதிகளில் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளமையைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரச் சுட்டெண் (AQI) 200ஐ விட அதிகரிக்கும்போது, அது ‘மிகவும் ஆரோக்கியமற்ற’ நிலையாக வகைப்படுத்தப்படுகிறது. இதனால் குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் அதிகளவிலான சுகாதாரப் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, கண்டி, எல்ல, அனுராதபுரம், சிலாபம் மற்றும் பத்தரமுல்லை உள்ளிட்ட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிகழ்நேரக் கண்காணிப்புத் தரவுகளின்படி, இன்று காலை 9.50 மணியளவில் பத்தரமுல்லையில் காற்றின் தரச் சுட்டெண் 143 ஆகப் பதிவாகியுள்ளது. இது ‘ஓரளவு ஆரோக்கியமற்ற’ நிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் நிலவும் காற்றின் தரம் தொடர்பான நிகழ்நேரத் தகவல்களை வழங்கும் AirShare தளத்தின் ஊடாக, காற்று மாசடைதல் நிலைமைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.