Sunday, November 22, 2026

பல மாவட்டங்களில் காற்றில் நுண்துகள்களின் அளவு அதிகரிப்பு!

1 min read · 18 reads

நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டின் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், ஏனைய பகுதிகளான அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு, கண்டி மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளை அண்டிய பிரதேசங்களிலும் வளிமண்டலத்தில் மிதக்கும் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்களே இந்த நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகவும், நாட்டின் காற்றுத் தரச் சுட்டெண்ணுக்கு அமைய இது சற்று ஆரோக்கியமற்ற நிலையாகும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, உணர்திறன் கொண்ட நபர்களுக்கு (சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள்) சுகாதார ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, எதிர்வரும் சில நாட்களுக்கும் இந்த நிலைமையை எதிர்பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்பட வேண்டியதாக சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் aq.cea.lk என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், உணர்திறன் கொண்ட நபர்கள் N95 போன்ற முகக்கவசங்களை அணிவதற்கும், சுகாதார ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வளிமண்டலத்தில் காணப்படும் நிலைமை குறித்துத் தொடர்ச்சியாகக் கண்காணித்து தேவையான விழிப்புணர்வுகளை உடனுக்குடன் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.