Tuesday, November 17, 2026

பில்கிஸ் பானு வழக்கு: இரு குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது

2 min read · 7 reads
2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டமை மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரு குற்றவாளிகளின் தண்டனையை நிறுத்தி வைத்து இந்திய உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் (M.M. Sundresh) மற்றும் பி.பி. வரலே (P.B. Varale) ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
பிபின் சந்திர ஜோஷி (Bipin Chandra Joshi) மற்றும் பிரதீப் மோர்தியா (Pradeep Mordhiya) ஆகிய இரு குற்றவாளிகளும் ஏற்கனவே 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளதை நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது.
இவர்களில் ஒருவர் கடுமையான உடல் ஊனமுற்றவர் என்பதும் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
இவர்களது மேன்முறையீட்டு மனுக்களில் சட்ட ரீதியாகவும், உண்மைத் தன்மை ரீதியாகவும் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் உள்ளதால், மேன்முறையீட்டு விசாரணைகள் முடியும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பிணை வழங்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணை நீதிமன்றத்தினால் விதிக்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: 2002ஆம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது, அப்போது 21 வயதுடையவரும் 5 மாத கர்ப்பிணியுமாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது 3 வயது மகள் உட்பட குடும்பத்தினர் 7 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 2008ஆம் ஆண்டு மும்பை சி.பி.ஐ விசேட நீதிமன்றத்தினால் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் குஜராத் அரசாங்கம் இவர்கள் 11 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்த போதிலும், 2024 ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை இரத்து செய்து அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது இருவருக்கு மட்டும் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ளது. (இத்தீர்ப்பு அவர்களின் குற்றத்தை இரத்து செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது).

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.