Saturday, November 14, 2026

இலங்கையில் சுமார் 15% பெரியவர்களுக்கு நீரிழிவு நோய்: 40% பேருக்குத் தங்களுக்கு நோய் இருப்பதே தெரியாது என நிபுணர் எச்சரிக்கை!

2 min read · 2 reads
இலங்கையில் வயது வந்தவர்களில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தினர் நீரிழிவு நோயுடன் (Diabetes) வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் சுமார் 40 சதவீதத்தினருக்குத் தங்களுக்கு இந்த நோய் இருப்பதே தெரியாமல் இருக்கலாம் என்றும் முன்னணி மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்துடன் இணைந்து இலங்கையும் இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினத்தைக் கடைப்பிடிக்கும் வேளையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை நீரிழிவு சங்கத்தின் தலைவரும், இலங்கை தேசிய வைத்தியசாலையின் நாளமில்லா சுரப்பியியல் ஆலோசகருமான (Consultant Endocrinologist) வைத்தியர் மணில்க சுமனதிலக்க இது குறித்துக் கூறுகையில், நீரிழிவு நோய் நாளுக்கு நாள் தீவிரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், கொழும்பில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அங்கு நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் காரணமாக, இளம் வயதினருக்கு டைப்-2 (Type 2) நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரித்த அவர், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் (IDF) தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 1.6 மில்லியன் பெரியவர்கள் நீரிழிவு நோயுடன் வாழ்ந்துள்ளனர். அவர்களில் சுமார் 603,000 பேர் (அதாவது 37.7%) நோய் கண்டறியப்படாதவர்களாக இருந்துள்ளனர் என அச்சம்மேளனம் மதிப்பிட்டுள்ளது.
உடலால் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினைத் திறம்படப் பயன்படுத்த முடியாதபோது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு என்ற நாட்பட்ட நோய் ஏற்படுகிறது. இந்நோய் முறையாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பார்வை இழப்பு, நரம்புப் பாதிப்பு மற்றும் கால்களை அகற்ற வேண்டிய நிலை (Lower-limb amputations) போன்ற தீவிர சிக்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.