Friday, November 20, 2026

EPDP உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மரண தண்டனை!

1 min read · 26 reads

2008ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில், மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் ஒருவரைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) உறுப்பினர்கள் எட்டுப் பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று (19) மரண தண்டனை விதித்துள்ளது.

தேவதாஸ் சுரேஷ் குமார் என்பவரைக் கடத்திக் கொலை செய்தமை தொடர்பான நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

செங்கலடியில் அமைந்துள்ள EPDP முகாமுடன் தொடர்புடைய குழுவினரால், வேனில் ஏற்றிச் செல்லப்பட்டே அவர் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் திகதி சுரேஷ் குமார் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதுடன், அவரது சடலம் புதைக்கப்பட்டு, அந்த இடத்தில் வாழை மரக்கன்றும் நடப்பட்டதாக வழக்கு விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஏறாவூர் பொலிஸார், EPDP உறுப்பினர்கள் ஒன்பது பேரைக் கைது செய்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பின்னர், மேலதிக விசாரணைக்காக 2016ஆம் ஆண்டு இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேனும் விசாரணைகளின்போது மீட்கப்பட்டது.

வழக்கின் விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டவிரோதக் கூட்டமாக ஒன்றுகூடியமை மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் எட்டுப் பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர்.

இதற்கமைய, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், கொலை செய்வதைப் பொதுவான நோக்கமாகக் கொண்டு சட்டவிரோதக் கூட்டத்தில் அங்கம் வகித்தமை தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவையின் 140ஆம் பிரிவின் கீழ் ஆறு மாத சாதாரண சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வழக்கின் ஒன்பதாவது பிரதிவாதி குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, மரண தண்டனை விதிக்கப்பட்ட எட்டுப் பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.