அதிதீவிரப் புயலாக வலுப்பெறும் ‘அக்வான்’ – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதி மற்றும் அதனை அண்மித்த தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயலுக்கு ‘அக்வான்’ (Akvan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று (16) இரவு 11.30 மணியளவில், குறித்த புயல் திருகோணமலையிலிருந்து சுமார் 640 கிலோ மீற்றர் தொலைவில், 12.2° வடக்கு அட்சரேகை மற்றும் 85.7° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலைகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (17) மாலை 5.30 மணியளவில் வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் தீவிரப் புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் இந்தப் புயல், எதிர்வரும் 19 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் அதிதீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 11.30 மணியளவில், நெல்லூர் மற்றும் துணி நகரங்களுக்கு இடையே ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கடற்கரைப் பகுதிகளைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையின் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் சீரான வானிலை நிலவும் எனவும், அதிகாலை வேளையில் நாட்டின் பல பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் காற்று வடமேற்கு அல்லது மேற்கு திசைகளிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும்.
காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில், அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.