இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ (‘අභිමානවත් ඉතිහාසයක ලාංකේය මුස්ලිම් ලකුණ’) நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 28 கண்டி டி.எஸ். சேனநாயக்க வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பதான மண்டபத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க அவர்களால் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நூல், மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தலைமையில் மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தலைமை தாங்கி உரையாற்றிய மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், நாட்டின் பல்லின கலாச்சார ஒருமைப்பாட்டில் இத்தகைய வரலாற்றுப் பதிவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறப்புப் பேச்சாளராக பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹித தசநாயக்க கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிக்கும், சிறப்புப் பேச்சாளர் பேராசிரியர் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
கண்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இருந்து முக்கிய அறிஞர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் மத்திய மாகாண ஆளுநர் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள், புத்திஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இந்த பிரம்மாண்ட நிகழ்வை சர்வ சமய சமாதான அமைப்பு (Inter-Religious Peace Foundation), கண்டி வை.எம்.எம்.ஏ (YMMA), ரத்னதீப அமைப்பு மற்றும் பஹன மீடியா (Pahana Media) ஆகிய அமைப்புகள் இணைந்து மிகச்சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தன.
இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் மற்றும் அவர்களின் வரலாற்றுச் சுவடுகளை சிங்கள வாசகர்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டி மாநகரில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு பாலமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

