துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது நுட்பமான அரசியல் பதிலடி கொடுக்கும் குணம் குறித்து நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த கால நிகழ்வு ஒன்றோடு ஒப்பிட்டு, துருக்கியின் தற்போதைய அரசியல் நகர்வை சர்வதேச ஊடகவியலாளர் ஜமால் சுல்தான் விவரித்துள்ளார்.
2017-ல் நடந்த அவமதிப்பு சம்பவம்: கடந்த 2017 ஆம் ஆண்டு, துருக்கியின் அப்போதைய குடும்ப மற்றும் சமூகக் கொள்கைகள் துறை அமைச்சரான ஃபாத்மா பெதுல் சயான் காயா (Fatma Betül Sayan Kaya) நெதர்லாந்திற்குப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது நெதர்லாந்து அதிகாரிகள், ஹிஜாப் அணிந்திருந்த அந்தப் பெண் அமைச்சரை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி, சிறைபிடித்ததோடு, அவரை நாட்டிற்குள் அனுமதிக்காமல் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பினர். இந்தச் சம்பவம் அப்போது இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான தூதரகப் பதற்றத்தை ஏற்படுத்தியது.
2026-ல் அர்தூகானின் ராஜதந்திர பதிலடி: தற்போது 2026 ஆம் ஆண்டில், நேட்டோ (NATO) கூட்டமைப்பின் முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து பிரதமர் துருக்கியின் அங்காரா விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவரை உத்தியோகபூர்வமாக நாட்டின் பிரதிநிதியாக வரவேற்க, ஜனாதிபதி அர்தூகான் தற்போதைய குடும்ப நலத்துறை அமைச்சரான மஹினூர் ஒஸ்டெமிர் கோக்டாஷ் (Mahinur Özdemir Göktaş)-ஐ அனுப்பி வைத்தார். தற்செயலாக, இவரும் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் அமைச்சராவார்.
அன்று தங்களது பெண் அமைச்சரை அவமதித்த நெதர்லாந்து நாட்டிற்கு, இன்று அதே பதவியில் இருக்கும் மற்றொரு ஹிஜாப் அணிந்த பெண் அமைச்சரை வைத்தே அந்நாட்டு பிரதமரை முறைப்படி வரவேற்கச் செய்துள்ளார் அர்தூகான்.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் அர்தூகான் எதையும் எளிதில் மறந்துவிடுவதில்லை என்பதை நெதர்லாந்து ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
