கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பிற்காக பேராசிரியர் பரீனா ருஸைக்கிற்கு ‘தமிழன்’ விருது!

Date:

அறிவை விதைத்து ஆராய்ச்சியை வளர்த்து சமூக முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு உயர்கல்வித் துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் பேராசிரியர் (கலாநிதி) உம்மு பரீனா ருஸைக் கல்வி, ஆய்வு, சுற்றுச்சூழல், சமூக நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை முன்னிறுத்தி, ‘தமிழன்’ தேசிய தினசரி பத்திரிகையின் ‘சிறந்த கல்வியியலாளருக்கான விருது 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கண்டி மாவட்டம், உடுநுவர தொகுதிக்குட்பட்ட வட்டதெனியவை வசிப்பிடமாகக்கொண்ட மர்ஹூம் முஹம்மத் ரவூப் – மரியம் பீபி தம்பதியின் புதல்வியான பேராசிரியர் கலாநிதி உம்மு பரீனா ருஸைக், ஆரம்பக் கல்வியை வட்டதெனிய முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்று தொடர்ந்து இரண்டாம் நிலைக்கல்வியை வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்த நிலையில் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பெற்றார்.

இதற்கிணங்க பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியலில் சிறப்புப் பட்டம் பெற்ற அவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வனயியல் மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தில் முதுநிலைப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ புவியியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்று அறிவியல் ஆய்வுலகில் தனித்துவமான தடத்தைப் பதித்துள்ளார்.

உயர்கல்வியில் கற்பித்தலுக்கான சான்றிதழையும் பெற்று கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணியிலும் சிறப்பாக விளங்கியுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வு அதிகாரியாக தனது சேவையைத் தொடங்கிய அவர், பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், சிரேஷ்ட விரிவுரையாளர், பேராசிரியர் எனப் படிப்படியாக உயர்ந்து  தற்போது புவியியல் துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

பல தலைமுறை மாணவர்களை உருவாக்கிய கல்வியியலாளராகவும் ஆய்வாளராகவும் வழிகாட்டியாகவும் அவர் உயர்ந்த மரியாதையைப் பெற்றுள்ளார்.

கல்வித் துறையுடன் மட்டுமல்லாமல், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகம், அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு. இலங்கை புவியியலாளர்கள் சங்கம், அபிவிருத்தி ஆராய்ச்சி மற்றும் தலையீட்டுக்கான மையம், இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் பேரவை

உள்ளிட்ட பல தேசிய நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து. சமூக மாற்றத்துக்கும் அறிவார்ந்த கொள்கை வடிவமைப்புக்கும் அரிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

அவரது ஆய்வுகள் கல்வி உலகுக்கும் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கை உருவாக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளன. கல்வி

என்பது வகுப்பறைக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அது சமூக மாற்றத்தின் வலிமையான கருவி என்பதை தனது வாழ்வாலும் பணியாலும் நிரூபித்திருக்கும் கல்வியியலாளராக அவர் திகழ்கிறார்.

மாணவர்களை ஊக்குவித்த கல்விச் சேவை,ஆராய்ச்சியில் வெளிப்படுத்திய சிறப்புத் திறன் மற்றும் சமூக நலனுக்கான இடையறாத பங்களிப்புகளைப் பாராட்டி, ‘தமிழன்’ தேசிய தினசரி பத்திரிகையின் ‘சிறந்த கல்வியியலாளருக்கான விருது 2026’ பேராசிரியர் (கலாநிதி) உம்மு பரீனா ருஸைக் அவர்களுக்கு பெருமையுடன் வழங்கப்படுகிறது.

அவரது கல்விப் பயணம் எதிர்கால தலைமுறைகளுக்கு அறிவின் ஒளிக்கோபுரமாகவும் சேவையின் உயரிய முன்மாதிரியாகவும் என்றும் விளங்கட்டும்.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...