ஈரானால் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிப் முனீர்; சிறைக்குள் வாடி வதங்கும் ஜனநாயகம், இம்ரான் கான்

Date:

லத்தீப் பாரூக்

பாகிஸ்தானில் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிரதமர் இம்ரான் கான் தற்போது மூன்று ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.

மக்களோடு நீண்ட காலமாக தொடர்புகள் அற்றிருந்த அவர், அண்மையில் உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்காக இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

பின்னர் அவர் மீண்டும் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவரது உடல்நிலை மற்றும் பார்வை குறித்து அவரது சட்டக் குழுவும் குடும்பத்தினரும் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்தே அவர் மருத்துவ சோதனைகளுக்காக தற்காலிகமாக இரவோடு இரவாக வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

ஏப்ரல் 2022 இல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, வசீகரம் மிக்க மக்கள் தலைவரான இம்ரான் கான்,  வாஷிங்டனில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மூலம் நடத்தப்படும் ஒருதேசம் தான் பாகிஸ்தான், என்ற நிலையை மாற்றி பாகிஸ்தானியர்களின் விருப்பங்களையும் அபிலாஷைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு சுதந்திர பாகிஸ்தானை உருவாக்குவதற்காக அரும் பணியாற்றினார்.

இம்ரான் கான் பதவியில் இருந்து வீழ்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் தான்  பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிப் முனீர்.

ஒரு பொதுவான குற்றவாளியாக சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட இம்ரான் கான், ஆட்சி கவிழ்ப்பை அமுல் படுத்திய சதிகாரர்களால்,   அரசியல் நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டார்.

வெளிச் சக்திகளின் கட்டளைகளுக்கு அடி பணிவதை விட, சொந்தக் காலில் நிற்கக்கூடிய ஒரு பாகிஸ்தானைக் கட்டியெழுப்ப இம்ரான் முயன்றார்.

இம்ரான் கான் மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய இஸ்லாமிய கூட்டமைப்பை உருவாக்குவது குறித்தும்  பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

பலஸ்தீன மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பலஸ்தீன நாடு உருவாகும் வரை தனது நாடு இஸ்ரேலை அங்கீகரிக்காது என்று இம்ரான் கான் வெளிப்படையாகக் கூறினார்.

“எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது; பாகிஸ்தானின் நிறுவுனர் காயித்-ஏ-ஆஸாம் முகமது அலி ஜின்னா கூறியது போல், பலஸ்தீனர்களுக்கு நியாயமான தீர்வுக்கான உரிமைகள் வழங்கப்படும் வரை, பாகிஸ்தான் இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்காது.

“பாகிஸ்தான் இஸ்ரேலை ஏற்றுக்கொண்டு, பலஸ்தீன மக்கள் மீதான ஒடுக்குமுறையை புறக்கணித்தால், நாங்கள் காஷ்மீரையும் கைவிட வேண்டியிருக்கும்” என்று கான் கூறினார், இது பாகிஸ்தானால் ஒருபோதும் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர் கூறினார்.

“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனைப் பற்றி பேசும்போது, நாம் ஒன்றை நன்றாக சிந்திக்க வேண்டும், அனைத்து வகையான அநீதிகளையும் எதிர்கொண்ட மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களை நாமும் கைவிட்டால் இறைவனிடம் அதற்காக பதிலளிக்க எம்மால் முடியுமா?  இதைச் செய்ய எனது சொந்த மனசாட்சி என்னை ஒருபோதும் அனுமதிக்காது. அதை என்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது” என்று கான் கூறினார்.

இத்தகைய கொள்கைகள் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும் அவர்களின் சியோனிச சார்பு, அரபு அடிமைகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தின. எனவே இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீய வடிவமைப்புகளை மகிழ்ச்சியுடன் செயல் படுத்தக்கூடிய ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது.

அந்தப் பின்னணியில் தான்,  குறிப்பாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டிய பின்னணியில்தான்,  எதிர்பார்த்தபடி இம்ரான் கான் அமெரிக்க ஆதரவு இராணுவத்தால் அதிகாரத்திலிருந்து நீக்கப்பட்டார்..

சிறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள இம்ரான் கான்.

அதன் பிறகு இன்றைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் தலைமையின் கீழ் ஒரு சட்டவிரோத அரசாங்கம் நிறுவப்பட்டது. இது அந்த நாடு முழுவதும் தன்னிச்சையான கிளர்ச்சியைத் தூண்டியது.

இந்தக் கிளர்ச்சிகள் இராணுவ ஆதரவு ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபம், மற்றும் அந்த மக்கள் இம்ரான் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கையும் வெளிப்படுத்தியது.

“இம்ரான் கானின் கைது ஜனநாயகத்துக்கு ஒரு இருண்ட நாள்” என்ற தலைப்பில் கட்டுரையாளர் பீட்டர் ஒபோர்ன், எழுதியுள்ள ஒரு கட்டுரையில், முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் அமெரிக்காவின் பகடைக் காயாக செயல்பட மறுத்தது, அவரது வீழ்ச்சிக்கு ஒரு பிரதான காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் இன்றைய அரசியல் நிலைமை, எகிப்தில் அரபு வசந்தத்தின் போதும் அதற்குப் பின்னரும் நிலவிய குழப்பமான சூழ்நிலையை பெரும்பாலும் ஒத்திருக்கின்றது. இம்ரான் கான் பற்றி நாட்டின் ஊடகங்கள் எதையும் வெளியிடுவதற்கு இராணுவம் தடை விதித்துள்ளது.

எகிப்தில் 63 ஆண்டுகளின் பின் முதல் தடவையாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாக இருந்த, இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்துக்கு சார்பான, முகமது முர்ஷியை பதவியில் இருந்து அகற்ற 11 பில்லியன் டொலர்களை, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் என்பன செலவிட்டன.

இம்ரான் கானுக்கு ஆதரவாக பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்.

அதன் பிறகு தாங்கள் பலஸ்தீனில் மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த படுகொலைகளுக்கு பூரண ஆதரவளிக்கக் கூடிய இராணுவ சர்வாதிகாரி சிசி, அங்கு பதவியில் அமர்த்தப்பட்டார். இதுபோலவே இம்ரான் கான் அகற்றப்பட்ட பின்னர் ஜனநாயகமும் இஸ்லாமும் பாகிஸ்தானில் புதைக்கப்பட்டன.

எகிப்தின் முர்ஷிக்கு ஏற்பட்டது போன்ற அதே விதியை இம்ரான் கானும் எதிர்கொள்ளக்கூடும் என்பதற்கான அறிகுறிகள் இன்று தென்படுகின்றன.

மக்கள் ஆணை மற்றும் ஜனநாயகக் கட்டமைப்பு என்பனவற்றுடன் கூடிய எந்தவொரு பாகிஸ்தான் அரசியல் தலைவருக்கும், எதிரான ஒரு போக்கையே வரலாறு நெடுகிலும் அமெரிக்கா கொண்டிருந்தமை அவதானிக்கத் தக்கதாகும்.

அமெரிக்கா தனது வாடிக்கையாளரான ஒரு சர்வாதிகாரி மூலம் அல்லது தன்னோடு சமரசம் செய்து கொள்ளக் கூடிய ஜனநாயகப் போர்வை போர்த்திய அரசியல்வாதிகள் மூலம், பாகிஸ்தானை ஆட்சி செய்யவே விரும்புகின்றது.

பாகிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளில் அமெரிக்கா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக குரல்கொடுத்த பின்னர், அமெரிக்கா தலைமையிலான “பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்” ஒரு அங்கமாக இம்ரான் கானின் ஆட்சி மீதான காலக்கெடுவும் குறிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பகடைக்காயாக செயல்பட மறுத்தமை இம்ரானுக்கு குறிப்பிடத்தக்க உள்ளூர் மதிப்பையும் புகழையும் ஈட்டிக் கொடுத்து. ஆனால் புஷ் அல்லது ஒபாமா தலைமையிலான வெள்ளை மாளிகையில் அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியது.

டுவைட் ஐசனோவர், லிண்டன் ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், பில் கிளிண்டன் மற்றும் ஜார்ஜ் டபுள்யூ புஷ் ஆகிய ஐந்து அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே இதுவரை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த ஐந்து பேருமே, பாகிஸ்தானில் இராணுவ ஆட்சிகள் நிலவிய காலப்பகுதிகளில் மட்டுமே, பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளமை இங்கு மிகவும் அவதானிக்கத் தக்கதாகும்.

2025 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியுடன் ஷார்ம் எல்-ஷேக் சமாதான மாநாட்டில் பஙகேற்ற, சதிகாரர்களால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் பி. எம். ஷாபாஸ், இந்த உலகை அமைதி மற்றும் செழிப்புடன் வாழக் கூடிய ஒரு இடமாக மாற்ற, கடந்த பல மாதங்களாக இரவும் பகலும் இடை விடாமல் அயராது உழைத்த உண்மையான சமாதானப் பிரியர் என ட்ரம்பை புகழ்ந்து பேசினார்.

ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையிலான முயற்சிகளின் விளைவாக முதலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்ப்பட்டது.

பின்னர் தனது அற்புதமான குழுவுடன் இணைந்து மத்திய கிழக்கிலும் போர் நிறுத்தத்தை அடைவதற்கு அவர் செய்த சிறந்த, பங்களிப்புகளுக்காக ட்ரம்பை சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கு பாகிஸ்தான் பரிந்துரைப்பதாக ஷாபாஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக டிரம்ப் சட்டவிரோதமாக அங்கீகரித்ததை, தனது சவுதி, எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அரபு சர்வாதிகார தோழர்களைப் போலவே, பிரதமர் ஷாபாஸும் புறக்கணித்துள்ளதாகவேத் தெரிகின்றது.

இஸ்லாத்தினதும்  முஸ்லிம்களினதும் கோட்டையான பாகிஸ்தானை, பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் ஷாபாஸ், ட்ரம்ப்பை சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கும் போது, பலஸ்தீனர்களை இஸ்ரேல் இனப் படுகொலை செய்வதற்கும், காசாவை முற்றிலுமாக அழிப்பதற்கும், ட்ரம்ப் 37.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளார் என்பதை முற்றாக மறந்துவிட்டார்.

இத்தகைய சூழ்நிலையில் ட்ரம்பை அமைதியான மனிதர் என்று ஷாபாஸ் எப்படி விவரிக்க முடியும்?  இது முற்றிலும் அவமானகரமான ஒரு செயல் ஆகும்.

இது பாகிஸ்தானையும், அந்த மாபெரும் நாட்டை உருவாக்க தங்கள் உயிரை தியாகம் செய்த மில்லியன் கணக்கான மக்களையும் அவமதிப்பது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் எல்லோரையும் அவமதிக்கின்றது.

பாகிஸ்தானுக்கு நிறைய எதிரிகள் உள்ளனர். இந்த எதிரிகள் 1971ல் கிழக்கு பாகிஸ்தானை பிரித்ததைப் போலவே பலுசிஸ்தானையும் பிரிக்க அவர்கள் இரவும் பகலும் சதித்திட்டம் தீட்டுகின்றனர். எனவே பாகிஸ்தானில் ஜனநாயகம் மற்றும் மக்கள் பங்கேற்பை மீட்டெடுப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், பாகிஸ்தானில் ஆரம்ப நாட்களிலிருந்தே இராணுவம் ஊழலின் கோட்டையாக இருந்து வருகின்றது. கிழக்கு பாக்கிஸ்தானில் வாழ்ந்த மக்கள் ஒருபோதும் தனி மாநிலத்தை விரும்பவில்லை.

எவ்வாறாயினும், ஊழல் நிறைந்த முன்னாள் இராணுவ சர்வாதிகாரி யஹ்யா கானின் வெட்கக் கேடான மற்றும் அருவருப்பான வாழ்க்கை முறை, மேலும் பாகிஸ்தான் இராணுவத்தால் பங்களாதேஷ் பிரதேசத்தில் வாழ்ந்த கிழக்கு பாகிஸ்தானியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் என்பன பாகிஸ்தானின் எதிரிகளுக்கு பங்களாதேஷ் என்ற ஒரு தனி நாட்டை உருவாக்க உதவியது.

இதே எதிரிகள் இப்போது பாகிஸ்தானை மேலும் பிளவுபடுத்துவதற்காக பலுசிஸ்தான் மாகாணத்தை குறிவைத்து வருகின்றனர்.

இந்த பின்னணியில் தான், பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிப் முனிர் தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க- ஈரான்   யுத்தத்தில் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபடுவதாகக் கூறி “இரட்டை விளையாட்டு” விளையாடி வருவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஆகஸ்ட் 26 அன்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி, தெஹ்ரானுக்கு மேற்கொண்ட இரண்டு நாள் விஜயம் ஒரு நாள் பயணமாக குறைக்கப்பட்டது, அது மட்டுமன்றி இந்த விஜயத்தின் போது மொஜ்தாபா கமேனி அவரை சந்திக்க மறுத்து அவரை அவமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரானிய அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் பாகிஸ்தானின் மத்தியஸ்த பங்கை கடுமையாக விமர்சித்துள்ளன. பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பக்கச்சார்பானவை, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நலன்களுடன் இணைந்துள்ளன என்று ஈரான் தரப்பு விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஈரானில், நாட்டின் முக்கிய மூலோபாய மற்றும் தேசிய பாதுகாப்பு முடிவுகள் இறுதியில் அதன் அதி உச்ச தலைவரால் தான் எடுக்கப்படுகின்றன. தங்களது அதி உச்ச தலைவரின் மறைவிடத்தை ஈரான் மிகக் கடுமையாகப் பாதுகாப்பதோடு உச்ச இரகசியமாகவும் பேணி வருகின்றது.

இந்நிலையில் ஈரானின் உயர்மட்டத் தலைவருடனான பாகிஸ்தான் தளபதியின் சந்திப்பு மறுக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அமெரிக்க ஆதரவு இராணுவ அரசாங்கத்தின் போலித் தன்மை பற்றி கட்டுரையாளர் எஸ். ஜுனைத் எஸ். அகமது, சுருக்கமாகக் குறிப்பிடுகையில், பாகிஸ்தான் இராணுவம் குறிப்பாக அதன் உயர் அதிகாரிகள், நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இயந்திரத்தில்  சிக்கித் தவித்து வருகின்றனர்.

பாகிஸ்தானின் இராணுவ உயரடுக்கு அதன் காலனித்துவ விசுவாசத்தை கைவிட்டு விட்டு, அடக்கி ஒடுக்கும் சக்திகளுக்கு ஆதரவாக நிற்காமல்,  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக திரும்பி நிற்காத வரை, அதன் அனைத்து பெரிய பட்டங்களும் இராணுவத் தளபதி, பீல்ட் மார்ஷல், மூலோபாய கட்டளை தளபதி, என எதுவுமே அர்த்தமற்றதாகும்.

அவர்கள் கோழைத்தனங்களின் அரச முத்திரைகளாகவே தொடர்ந்தும் இருப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18...

இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

-லத்தீப் பாரூக் இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...