Monday, November 9, 2026

மோட்டார் வாகனத் திணைக்கள சேவைகளைப் பெறுவதில் புதிய நடைமுறை அறிமுகம்!

1 min read

மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, வாகனங்களைப் புதிதாகப் பதிவு செய்தல், வாகன உரிமையை மாற்றுதல், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட அனைத்து ஒருநாள் சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சேவைகளுக்கான நேரத்தைப் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக ஒதுக்கிக்கொள்ள முடியும்.

  • கொழும்பு: 011 2 117 116

  • கம்பஹா: 033 2 117 116

  • குருநாகல்: 0372 117 116

  • ஹம்பாந்தோட்டை: 047 2 117 116

  • அனுராதபுரம்: 025 2 117 116

  • யாழ்ப்பாணம்: 021 2 117 116

இணையம் ஊடாகவும் முன்பதிவு செய்யலாம்

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையவழி முன்பதிவுக் கட்டமைப்பான https://dmtappointments.dmt.gov.lk என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் தேவையான நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும்.

சாதாரண சேவைகளுக்கு முன்பதிவு அவசியமில்லை

இதற்கிடையில், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாதாரண சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சாதாரண வாகன உரிமை மாற்றத்திற்கான ஆவணங்களை (Vehicle Transfer Documents) கையளிப்பதற்கான வசதிகள், நாரஹேன்பிட்டியிலுள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு மேலதிகமாக மேலும் சில இடங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன.