Wednesday, November 18, 2026

புதிய அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 27 கொடுப்பனவு!

2 min read · 10 reads

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் புதிய மற்றும் இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கான நவம்பர் மாதக் கொடுப்பனவை எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்கும் காலப்பகுதி கடந்த நவம்பர் 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக வெளியிடப்பட்ட தகுதிப் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள பயனாளர்கள் இன்று (17) முதல் வங்கிக் கணக்குகளைத் திறந்து உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளர்கள் தங்களது கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரச வங்கியொன்றில் விசேட சமூகப் பாதுகாப்பு நன்மைகள் கணக்கொன்றைத் திறக்க வேண்டும்.

குறித்த கணக்கைத் திறப்பதற்குத் தேவையான பரிந்துரைக் கடிதங்களை, இன்று முதல் அந்தந்த பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

வங்கிக் கணக்கைத் திறந்த பின்னர், பயனாளர்கள் மீண்டும் பிரதேச செயலகத்திற்குச் சென்று சமூகப் பாதுகாப்புத் தகவல் பதிவேட்டில் தங்களது வங்கிக் கணக்கு விபரங்களைப் புதுப்பிக்க வேண்டும்.

மேலும், பயனாளர்கள் தங்களுக்குச் சொந்தமான ஏனைய வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களைச் சரிபார்ப்பதற்கு அனுமதி வழங்கும் சத்தியக்கடதாசியொன்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதன் மூலம், தேவையான சந்தர்ப்பங்களில் பயனாளர்களின் வங்கிக் கணக்கு விபரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் இருந்து நலன்புரி நன்மைகள் சபை அல்லது உரிய பிரதேச செயலகத்தினால் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இதற்கான சத்தியக்கடதாசிப் படிவங்களை பிரதேச செயலகங்களில் உள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும், ஏற்கனவே அஸ்வெசும திட்டத்தின் கீழ் செயற்பாட்டிலுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ள பயனாளர்கள் புதிதாகக் கணக்கொன்றைத் திறக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே, கொடுப்பனவுகளை உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான வங்கிச் செயற்பாடுகள் மற்றும் தகவல் சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறு தகுதியுடைய பயனாளர்களிடம் சபை கேட்டுக்கொண்டுள்ளது

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.