சுகாதார வழிமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுகின்ற அனைத்து பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடு பூராகவும் இன்று முதல் இதுதொடர்பான தேடுதல் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சினால் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்கின்ற அனைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், தனியார் பஸ்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதை தொடர்ந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் கடந்த 3 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி பயணிகளை அழைத்து செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடே இதற்கு காரணம் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது.