அடுத்து வரும் வாரங்களில் இலங்கை எதிர்கொள்ளும் அபாயம்!
எச்சரிக்கிறது டெய்லி மிரர் பத்திரிகை. ஜெமிலா ஹுஸைன் எழுதியுள்ள செய்தியின் தமிழாக்கம் இது.
✨ தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வின் பிரகாரம், ஜூலை நடுப்பகுதியில் கொழும்பில் டெல்ற்றா தொற்றின் சாத்தியம் 20 -30 வீதமாக இருந்தது. ஜூலை இறுதிப் பகுதியில் அது 75 வீதமாக அதிகரித்துள்ளது.
✨நோயாளர் விடுதியொன்றிற்கு ஆரம்பத்தில் ஒட்சிசன் வசதி கொண்ட 4 கட்டில்கள் வழங்கப்பட்டன. பின்னர் இது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு 12 ஆக மாறியது. இப்போது நோயாளிகள் அதிகரித்த நிலையில் இதுவும் போதாமல் ஆகியுள்ளது.
✨”இந்த நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்க முடியாமல் நாங்கள் தடுமாறுவதற்கு, ஒட்சிசன் பற்றாக்குறை காரணம் அல்ல. இந்தளவு நோயாளிகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒட்சிசன் வசதியுள்ள கட்டில்களோடு தயார் நிலையில்தான் இருந்தோம். இது எங்களது எதிர்பார்ப்பை விடவும் அதிகம்” என ஒரு வைத்தியர் கூறினார்.
✨30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றிய இலங்கையின் வேகமான நடவடிக்கை, உலகளவில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. எனினும், போக்குவரத்துத் தடை தளர்த்தப்பட்டிருப்பதால், மேல் மாகாணத்திலிருந்து பிற மாகாணங்களுக்கு டெல்ற்றா வைரஸைப் பரப்புவோரின் அபாயம் தோன்றியுள்ளது.
✨அடுத்தடுத்த வாரங்களில் அதிக நோயாளிகள் குறித்தும் அதிக மரணம் குறித்தும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
✨இந்த நோய்த்தொற்று மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்தும் வசதி, சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மட்டுமே உள்ளது.
✨மூடிய இடங்களில், தண்ணீர் குடிப்பதற்குக் கூட முகக் கவசங்களை அகற்ற வேண்டாம் என வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அவசியம் ஏற்பட்டால், மூடிய இடங்களிலிருந்து வெளியேறி நீர் அருந்துமாறு சொல்கின்றனர்.
அடுத்து வரும் வாரங்களில், இலங்கை மிக மோசமான மெடிக்கல் சுனாமியை எதிர்நோக்கியுள்ளது. டெல்ற்றா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பரவி வருவதாலேயே இந்த அபாய நிலை தோன்றியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் டெய்லி மிரருக்குத் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன என்றும், தற்போதுள்ள 2/3 பங்கு நோயாளிகள் ஒட்சிசன் தேவையுடையோராக உள்ளனர் என்றும், கொவிட் 19 பெருந்தொற்று சிகிச்சையில் முன்னரங்கில் இயங்கும் சிரேஷ்ட வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எல்லா மருத்துவ விடுதிகளும், கொவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் விடுதிகளாக ஆகியுள்ளன. இம் மாதம் 3 ஆம் திகதி, இவ் வைத்தியசாலையில் மட்டும் 610 கொவிட் ‘பொசிற்றிவ்’ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
நோயாளர் விடுதியொன்றிற்கு ஆரம்பத்தில் ஒட்சிசன் வசதி கொண்ட 4 கட்டில்கள் வழங்கப்பட்டன. பின்னர் இது மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டு 12 ஆக மாறியது. இப்போது நோயாளிகள் அதிகரித்த நிலையில் இதுவும் போதாமல் ஆகியுள்ளது.
“இந்த நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்க முடியாமல் நாங்கள் தடுமாறுவதற்கு, ஒட்சிசன் பற்றாக்குறை காரணம் அல்ல. இந்தளவு நோயாளிகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒட்சிசன் வசதியுள்ள கட்டில்களோடு தயார் நிலையில்தான் இருந்தோம். இது எங்களது எதிர்பார்ப்பை விடவும் அதிகம்” என ஒரு வைத்தியர் கூறினார்.
“கிட்டிய அண்மையில் ஒட்சிசன் தேவையுள்ள நோயாளிகள் மேலும் அதிகரிப்பார்கள் என்று அனுமானிக்கிறேன். ஆனால், அவர்களுக்கு ஒட்சிசன் வழங்க முடியாத நிலையே ஏற்படும்” என அவ் வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய டெல்ற்றா வைரசின் பரவல் காரணமாக, இன்னும் ஒரு மாதத்தில் இலங்கை மிக மோசமான மருத்துவ அனர்த்தத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என களத்திலுள்ள வைத்தியர்கள் கூறுகின்றனர்.
இன்றைய தேதி வரை, இலங்கையில் நிகழ்ந்த மிக மோசமான மருத்துவ அனர்த்தமாக, 1934 -1935 இல் பரவிய மலேரியா தொற்றே சுட்டிக்காட்டப்படுகிறது. இதன்போது 80,000 பேரளவில் இறந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் இலங்கையில் இருந்த ஒவ்வொரு 20 பேருக்கு ஒருவர் வீதம் இந்நோய் காரணமாக இறந்துள்ளனர்.
எவ்வாறாயினும், டெல்ற்றா வைரஸ் உலகளவில் ஏற்படுத்தி வரும் அழிவு காரணமாக, அடுத்தடுத்த வாரங்களில் கொவிட் 19 பரவலானது, இந்த மலேரியா தொற்றை விட மோசமான நிலை ஏற்பட வழிவகுத்து விடும் என வைத்தியர்கள் அஞ்சுகின்றனர்.
டெல்ற்றா வைரஸ் பரவலின் பிரதான இடமாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொழும்பிலும் அதன் சுற்றயல் கூறுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்வின் பிரகாரம், ஜூலை இரண்டாம் வாரம் டெல்ற்றா தொற்றின் சாத்தியம் 20 -30 வீதமாக இருந்தது. ஜூலை இறுதிப் பகுதியில் அது 75 வீதமாக அதிகரித்துள்ளது என தொற்று நோய் நிபுணர் நீலிகா மாளவிகே தெரிவித்தார். இப்போது நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இது சென்றுள்ளது. ஆதலால், உண்மை நிலவரத்தை இது பிரதிபலிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
டெல்ற்றா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பு மேல் மாகாணத்திலேயே காணப்படுகிறது என வைத்தியர்கள் கூறுகின்றனர். எனினும் தற்போது இந்த நோய்த்தொற்று மாதிரிகளை பரிசோதனைக்குட்படுத்தும் வசதிகள் சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் மட்டுமே உள்ளன.
சுகாதார அமைச்சு விரைவில் இதையும் தொடங்கவுள்ளது.
தற்போது 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றிய இலங்கையின் வேகமான நடவடிக்கை, உலகளவில் சிறந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இலக்கு வைக்கப்பட்டுள்ள கணிசமான மக்கள் தொகையினருக்கு – குறைந்தபட்சம்
ஒகஸ்ட் மாத இறுதிக்குள் முதல் டோஸை வழங்கி விடலாம் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவிக்கிறது.
ஒரு டோஸ் தடுப்பூசி ஏற்றியோர் மீது டெல்ற்றா தொற்றும் வாய்ப்பும் அபாயமும் அதிகம் என்பதால், கூடிய விரைவில் மற்றைய தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவர்கள் மக்களை வேண்டிக் கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், போக்குவரத்துத் தடை நீக்கப்பட்டிருப்பதால், ஏனைய மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு வருவோரால், அம் மாகாணங்களிலும் டெல்ற்றா வைரஸைக் கொண்டு சென்று பரப்பும் அபாயம் தோன்றியுள்ளது. இது இன்னும் அழிவை ஏற்படுத்தும்.
டெல்ற்றா வைரஸ் ஏற்கனவே இங்கு காணப்படுவதால், இந்த அனர்த்தத்தை நாடு எதிர்கொண்டுதான் ஆக வேண்டியுள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் அதிக நோயாளிகள் குறித்தும் அதிக மரணம் குறித்தும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தளர்வான முகக் கவசங்களைத் தவிர்த்து, இறுக்கமான முகக் கவசங்களை அணியுமாறும், மூடிய இடங்களின் உள்ளே ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டாம் எனவும் மருத்துவர்கள் வேண்டுகின்றனர்.
மூடிய இடங்களில் தண்ணீர் குடிப்பதற்குக் கூட முகக் கவசங்களை அகற்ற வேண்டாம் என வைத்தியர்கள் ஆலோசனை கூறுகின்றனர். அவசியம் ஏற்பட்டால், மூடிய இடங்களிலிருந்து வெளியேறி நீர் அருந்துமாறு சொல்கின்றனர்.
சாத்தியமான வரை, வெளியில் செல்லாது தத்தமது நகர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் அவர்கள் மக்களைக் கேட்டுள்ளனர்.
நன்றி: Daily Mirror 04.08.2021
தமிழாக்கம்: சிராஜ் மஷ்ஹூர்.