சுற்றுலா இந்திய அணிக்கும்,தென்னாப்பிரிக்க அணிக்கும்மிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.இதற்கமைய, தென் ஆபிரிக்க அணி தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றி இந்திய அணியை வெள்ளையடிப்பு செய்தது.
கேப் டவுனில் நேற்று (23) இடம்பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.இதன்படி, முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 49.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாப்பிரிக்க அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக குயின்டன் டி கொக் 124 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் இந்திய அணியின் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந் நிலையில், 288 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 283 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 65 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.அத்துடன், அதிரடியாக துடுப்பாடிய தீபக் சஹர் 54 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்து வீச்சில் லுங்கி கிடி மற்றும் அண்டிலே பெஹ்லுக்வாயோ தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் நாயகனாக தென் ஆபிரிக்காவின் குயின்டன் டி கொக் தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.