அரசியல் நெருக்கடிக்கான தீர்வு இன்னமும் எட்டாத தொலைவிலேயே: ஏன் இப்படி செய்யக் கூடாது?

Date:

அரசியலில் பதவிப் போட்டி என்று வந்துவிட்டால் அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகினிலே என்ற நிலைதான் மிஞ்சும்.

இன்று துரதிஷ்டவசமாக இலங்கை அரசியலிலும் இதே நிலைதான். மக்கள் கோஷம் முதலில் என்னவோ கையாளாகாத சோனகிரி தம்பிக்கு எதிராகத் தான் தொடங்கியது. ஆனால் அது வியாபித்து இன்று அண்ணன் “மைனா தாத்தாவுக்கு” எதிராகவும் மாறிவிட்டது.

இதற்கு முக்கிய காரணம் அண்ணன், தம்பிகள் இருவருமே இன்றைய இளைய தலைமுறையை புரிந்து கொள்ளத் தவறியதும் குறைத்து மதிப்பிட்டதும் தான் என்று நான் நினைக்கின்றேன். அதிலும் மைனா தாத்தா ஒரு படி மேலே சென்று பேராண்டிகளை ஓட்டப் போட்டிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

பேராண்டிகளோ தாத்தாவின் அழைப்பை பாரதூரமாக எடுத்துக் கொண்டு வீட்டை முற்றுகையிட்டு ஓட்டப் போட்டிக்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கத் தொடங்கி விட்டனர்.

அதன் விளைவு ஏற்கனவே சிறகொடிந்து மற்றவர்களின் துணையோடு நடமாடித் திறிந்த மைனா தாத்தா இன்று குடும்பத்தோடு வீட்டுக்குள் முடங்கி எஞ்சியுள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து தனது நிலையை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளார்.

பதவிகள் மீதான அண்ணன் தம்பியின் இந்த கயிறு இழுப்பு போராட்டம் மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவே சமூக ஊடகங்களில் இன்று வெளியாகி உள்ள சில உள்வீட்டு காட்சிகளில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு இன்னமும் எட்டாத தொலைவிலேயே உள்ளது. அதனால் மக்கள் எழுச்சிப் போராட்டமும் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்குறியும் இப்போது முடிவில்லாமல் நீடிக்கின்றது.

இந்தப் பின்னணியில் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று பலரும் யோசித்து வருகின்ற நிலையில் ஏன் இப்படித் தீர்க்க்க முடியாது என்று நானும் ஒரு கோணத்தில் யோசித்தேன்.

நீண்ட நாட்களாக என் மனதில் இந்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்த போதிலும் அதை எழுத்தில் முன்வைக்க எனக்கு போதிய கால அவகாசம் கிட்டவில்லை. இன்று அது கிடைத்ததால் அதை எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன். இது சரியா அல்லது பிழையா என்று எனக்குத் தெரியாது.

இது சாத்தியமா இல்லையா என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் ஏன் இப்படி செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். எனது எண்ணம் இதுதான்.

எம் எல்லோருக்கும் தெரியும் நாம் பாராளுமன்றத்துக்கு இரு வழிகளில் உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றோம். ஒன்று நாம் எல்லோரும் பங்கேற்கும் மாவட்ட ரீதியான விகிதாசார முறையிலான நேரடித் தெரிவு. மற்றது கட்சிகளுக்கு கிடைக்கும் ஒட்டு மொத்த வாக்கின் விகிதாசார அடிப்படையிலான தேசியப் பட்டியல் தெரிவு. இந்த தேசியப் பட்டியல் தெரிவு அதன் உண்மையான நோக்கத்தை இன்று நிறைவேற்றவில்லை.

மாறாக அதன் மூலமும் தேர்தலில் தோல்வியுற்ற மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், அயோக்கிய கும்பல்களுக்கு வக்காளத்து வாங்கியவர்களும், நிதி உதவி புரிந்தவர்களும் தான் தெரிவு செய்யப்படுகின்றனர். தேசியப் பட்டியலின் உண்மையான நோக்கம் மிக விரிவானது. கட்டுரையின் நீளம் கருதி அதை விளக்குவதை தவிர்த்துக் கொள்கிறேன்.

பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும் எல்லோரும் இணைந்து இன்றைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று சகல கட்சிகளின் தலைவர்களும் பிரமுகர்களும் குரல் கொடுத்து வருகின்றனர். சில இடங்களில் விட்டுக் கொடுப்புக்களுக்குத் தயார் என்றும் கூறுகின்றனர். இது உண்மையெனில் அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று தான். அது தான் எனது யோசனை.

ஒவ்வொரு கட்சியும் தங்களால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர்களை உடனடியாக இராஜினாமாச் செய்யும் படி கோர வேண்டும். வேறு வழிகளில் தேசியப் பட்டியல் உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் இருந்து விலக்குவது கஷ்டமானது.

அவ்வாறு நாட்டு நலன் கருதி அவர்கள் இராஜினாமா செய்தால் பாராளுமன்றத்தில் 29 வெற்றிடங்கள் ஏற்படும். அதன் பிறகு அந்த வெற்றிடங்களை நிரப்ப தேசியப் பட்டியலுக்கான உண்மையான நோக்கத்தின் அடிப்படையில் சகல வித துறைசார் நிபுணர்களும், ஆக்கத்திறன் மிக்கவர்களும் கல்வயியலாளர்களும், ஏனைய புத்தி ஜீவிகளும் உள்ளடங்களாக எல்லா கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 29 பாராளுமன்ற ஆசனங்களும் நிரப்பப்பட வேண்டும். இவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேணடும் என்ற நிபந்தனைகளை வேண்டுமானாலும் வகுத்துக் கொள்ளலாம்.

அதன் பிறகு அந்தக் குழுவில் இருந்து 15 முதல் 20 பேர் வரையான ஒரு அமைச்சரவையை நியமிக்க வேண்டும். அப்போது இதற்கு முன்னர் எந்தக் குற்றச்சாட்டுக்களும், குற்றப்பின்னணிகளும் அற்ற, ஊழல் அற்ற, நேர்மையான துறைசார் நிபுணத்துவம் பெற்ற, கல்வித் தகைமை கொண்ட, உண்மையில் நாட்டை நேசிக்கின்ற ஒரு அமைச்சரவையை நாம் பெறலாம்.

இங்கே ஒரு வாதம் முன்வைக்கப்படும். எப்படி இந்தப் புதியவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை நிறைவேற்றலாம் என்று. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் கூட பயிலாதவர்கள் பெரிய பெரிய அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்ற போது இது ஒன்றும் சாத்தியமற்ற விடயமல்ல.

அதுமட்டும் அல்ல நமது நாட்டில் மிகச் சிறந்த நிர்வாகத் திறனும், அறிவும் அனுபவமும், உரிய தகைமையும் கொண்ட அமைச்சு செயலாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களைத் தெரிவு செய்து இந்த அமைச்சர்களோடு இணைந்து சுதந்திரமாகச் செயற்பட அனுமதிக்க வேண்டும்.

இனி இந்தப் புதிய அமைச்சரவைக்கு யார் தலைமை தாங்குவது என்பது தான் அடுத்த கேள்வி. என்னைப் பொருத்த மட்டில் இன்றைய பாராளுமன்றத்துக்குள் இருந்து விரல் விட்டு எண்ணக் கூடிய கல்வித் தகைமையும் நிர்வாகத் திறனும், அரசியல் அனுபவமும், அங்கீகாரமும் மிக்கவர்களை நாம் அடையாளம் காண முடியும்.
அவர்களில் ஒருவரை பிரதமராக நியமிக்கலாம். அது யாராகவும் எந்த இனம் சார்ந்தவராகவும் இருக்கலாம் என்ற பரவலான மனநிலை இங்கு மிக அவசியம்.

மக்கள் எழுச்சிக் கோஷத்தின் படி ஜனாதிபதியை பதவி நீக்குவது உட்பட ஏனைய எல்லா அரசியல் மற்றும் பொருளாதார சர்ச்சைகளுக்கும் முடிவு காணும் முழுப் பொறுப்பும் இந்தப் புதிய அமைச்சரவையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அதற்கான காலவரையறையும் வகுக்கப்பட வேண்டும்.

ஆனால் இது மிகவும் பரந்த நோக்கத்தில் செய்யப்பட வேண்டியது. மிக விரிவான மனநிலை இதற்கு அவசியம். இன்றைய குறுகிய மனநிலை கொண்ட, பதவி வெறியும் பணத்தாசையும் கொண்ட அரசியல் வாதிகள் இதற்கு இணங்குவார்களா என்ற கேள்வி எனக்குள்ளும் இருக்கத்தான் செய்கின்றது. இருந்தாலும் என் சிற்றரிவுக்கு எட்டிய வரை வேறு உடனடி மார்க்கங்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதைவிட்டு விட்டு மீண்டும் தலையணை மாற்றி வைத்தியம் செய்வதிலோ அல்லது சங்கீதக் கதிரை விளையாட்டில் ஈடுபடுவதாலோ எந்தப் பிரச்சினையும் தீரப் போவதில்லை. நிலைமைகள் மேலும் மோசமாகி வன்முறைகளுக்கு இடடுச் செல்லும் வாய்ப்பு தான் அதிகம் உள்ளது.

மாற்றீடாக இன்றைய எதிர்க்கட்சித் தலைவரிடம் பிரதமர் பதவியை ஒப்படைத்து விட்டு மைனா தாத்தாவை மீண்டும் எதிர்க்கட்சித் தவைராக்கும் ஒரு முயற்சியும் இடம்பெறுவதாக காற்று வாக்கில் சில தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் மூலம் இன்றைய சோளக் காட்டு பொம்மை நாளைய அலிபாபவாக மாறி அவரது தலைமையில் 40 சகாக்களை அமைத்துக் கொண்டு மைனா தாத்தாவையும் அவர் கூட்டத்தையும் காப்பாற்றிக் கொண்டு எரிகிற வீட்டில் பிடுங்கியது வரைக்கும் இலாபம் என்ற நிலை தான் தொடரும்.

ஆனால் நமக்குத் தேவை அதுவல்ல. உடனடித் தீர்வும் மாற்றமும் தான் இன்றைய தேவை. அதுவே மக்களின் அபிலாஷை.

மக்கள் போராட்டம் தொடரட்டும்!அது மாற்று வழிகளிலாவது வெற்றியின் சிகரத்தை தொடட்டும்.

(மூலம்:நௌஷாத் மொஹிதீன்-முகப்புத்தகம்)

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...