தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷம் அழிக்கப்பட்டு 41 ஆண்டுகள் நிறைவு!

Date:

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் அமைந்திருந்த ‘பொதுசன நூலகம்’, பேரினவாதிகளால் திட்டமிட்டு எரிக்கப்பட்டு இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன.

இலங்கையின் முதலாவது மாவட்ட சபைத் தேர்தல்கள் 1981ஆம் ஜூன் 4 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கையின் பல இடங்களிலிருந்து பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1981 மே 31 அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் நடந்துகொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது.

அன்றிரவு யாழ்ப்பாணத்தின் பிரபல வணிக நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று கொளுத்தப்பட்ட வன்முறைத் தீ மறுநாளும் கொழுந்துவிட்டு எரிந்தது ஜூன் ஒன்றாம் திகதி இரவு யாழ்ப்பாணத்திலிருந்த ஈழ நாடு தினசரி அலுவலகமும், அதற்கு அருகிலிருந்த கடைகள் பலவும் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

அன்று முழுவதும் நிலவிய பதற்றச் சூழலை இந்தச் சம்பவம் மேலும் தீவிரப்படுத்தியது; அதைத் தொடர்ந்துதான் அந்த வரலாற்றுக் கொடுமை அரங்கேறியது.

ஆம், பேரினவாத கும்பல் ஒன்று யாழ்ப்பாண பொதுசன நூலகத்தைத் திட்டமிட்டு கொளுத்தியது. தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதி திரும்பப் பெற முடியாத வகையில் எரிந்து சாம்பலாகிப் போனது.

இருபதாம் நூற்றாண்டின் இன, பண்பாட்டு அழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படும் யாழ்ப்பாண நூலக எரிப்பு நடந்து இன்றோடு 41 ஆண்டுகள் ஆகின்றன

1930-களில் யாழ்ப்பாணத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்ந்த கே.எம்.செல்லப்பாவின் மனதில் உதித்த எண்ணம்தான் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கான அடிப்படை.

தன்னுடைய சொந்த சேகரிப்பிலிருந்த நூல்களையும், பத்திரிகைகளையும் கொண்டு, 1933-ல் வாடகை நூலகம் ஒன்றை தன்னுடைய வீட்டிலிருந்தே தொடங்கிய செல்லப்பா, அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல விரும்பினார்.

அதைத் தொடர்ந்து நகரின் மற்ற முக்கியப் பிரமுகர்களின் ஆலோசனையின் பேரில், 1934 ஆகஸ்ட் 1 அன்று யாழ்ப்பாண பொது மருத்துவமனை சாலையில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்கள் மற்றும் 36 பருவ வெளியீடுகளுடன் யாழ்ப்பாண பொதுசன நூலகம் தொடங்கப்பட்டது. ஒருகட்டத்தில் இங்கு இட நெருக்கடி ஏற்படவே, 1936-ல் நகரக் கட்டடம் அமைந்துள்ள டவுன் ஹாலுக்கு அருகே நூலகம் மாற்றப்பட்டது.

தொடங்கப்பட்ட தினத்திலிருந்தே நூலகம் மிக வேகமாக வளரத் தொடங்கியது. பாதிரியார்கள் லோங், டேவிட் உள்ளிட்ட யாழ்ப்பாணச் சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள், கல்வியாளர்கள் எனப் பல தரப்பினரும் நூலகத்துக்கான நிரந்தமான நவீனக் கட்டடம் ஒன்றை உருவாக்க முயன்றனர்.

கட்டடக் கலைஞர் வி.எம். நரசிம்மன் கட்டிடத்தை வடிவமைத்துக் கொடுக்க, யாழ் நூலகம் சர்வதேசத் தரத்தை எட்டுவதற்கான ஆலோசனைகளை இந்திய நூலகர் எஸ்.ஆர். ரங்கநாதன் வழங்கினார்.

1953-ல் நூலகத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, திராவிடக் கட்டடக் கலையில் அமைந்த புதிய நூலகக் கட்டடம் 1959 அக்டோபர் 11 அன்று திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அப்போது யாழ்ப்பாணத்தின் மேயராக இருந்த ஆல்ஃபிரட் துரையப்பா நூலகத்தைத் திறந்துவைத்தார்.

நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி 1967-ல் தொடங்கப்பட்டது; உரைகள், கருத்தரங்கங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக நிகழ்வரங்கம் ஒன்று 1971-ல் திறக்கப்பட்டது.

உலகம் முழுவதும் தனி நபர்கள், அயல் தூதரகங்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் குவியத் தொடங்கின் நூலகக் குழுவும் அரிய நூல்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

உலகில் வேறு எங்கும் இல்லாத நூற்றாண்டு பழமை வாய்ந்த ஓலைச்சுவடிகள், நூல்கள், வரலாற்று ஆவணங்கள், 1800-களில் யாழ்ப்பாணத்தில் வெளியான பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என மிகப் பெரிய எண்ணிக்கையிலான பொக்கிஷங்களை யாழ்ப்பாண நூலகம் தன்னகத்தே கொண்டிருந்தது.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடமும் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் போன்றவை இங்குப் பத்திரப்படுத்தப்பட்டிருந்தன.

(மூலம்: இணையம்)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...