கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு? -சென்னையில் அதிரடி சோதனை!

Date:

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10 சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை செய்து ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து, தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை காவல்துறையினர் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர் தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது.

தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு ஒன்று இவர் மீது நிலுவையில் உள்ளது. அதே போல தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பண பரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்தவரான ஹாரூன் ரஷித், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.

வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்தவரான முகமது முஸ்தபா, தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த திடீர் சோதனையில் தொடர்புடைய நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர் யார் யாருடன் தொடர்பில் உள்ளார் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் ஐ.எஸ். ஆதரவாளர்களை குறி வைத்து இன்று நடத்தப்பட்ட சோதனையில் மண்ணடி, முத்தியால்பேட்டை, ஏழுகிணறு, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பு நிலவியது.

சோதனை நடைபெற்ற வீடுகளின் முன்பு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சோதனைக்குள்ளாகி இருக்கும் 5 பேரையும் தொடர்ச்சியாக கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, கோவை கார் வெடிப்பு சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தமிழகம் முழுவதும் சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் பொலிஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...