அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் மற்றுமொரு போராட்டத்தை நடாத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் இன்று (23) கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது உரிய அனுமதிகளை பெற்று போராட்டத்தை நடத்துவதற்கு தான் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடு தற்போது பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் தேர்தலொன்றுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டில் பல மக்கள் தேர்தல் மற்றும் அரசியலால் சலித்துவிட்டனர். நாட்டின் நம்பிக்கை புதிய இளம் முகங்களில் உள்ளது, என்று ஜனாதிபதி கூறினார்.
மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய நபர்களை அறிமுகப்படுத்தி தேர்தலை நடத்தி அதன் பின்னரே எவருக்கும் அதிகாரம் கிடைக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விருப்பு வாக்கு முறையின் கீழ் ஊழல் மோசடிகள் வழமையாக காணப்படுவதால் தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டால் அதனை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் சட்டம் பயன்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மீண்டும் போராட்டம் பற்றி பேசுவோம். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கூட்டங்களை நடத்தலாம். நான் சர்வாதிகாரி என்று சொன்னால் போதும். ஹிட்லரைப் போல சர்வாதிகாரியாக இருந்தாலும் பரவாயில்லை. லைசென்ஸ் எடுத்து போராட்டம் நடத்தலாம். ஆனால் மற்ற வாகனங்களை தடுக்க வேண்டாம்.
போராட்டம் நடத்தினால் ஆட்சியை மாற்ற அனுமதிக்க மாட்டேன். ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இடமளிக்கப்பட மாட்டாது” என ஜனாதிபதி தெரிவித்தார்.