இந்திய கடன் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய இந்த 370 வகையான மருந்துகளும் அடுத்த மாதம் இலங்கையில் கிடைக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான 14 மருந்துகளில் ஏழு மருந்துகளை ஒரு வருட காலத்திற்கு மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் , சீன அரசாங்கத்தின் மானியத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மருந்துகள் தொடர்பில் சில சிரமங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த அமைச்சர், மருந்துப் பிரச்சினை இன்னும் கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மருந்துகள் தொடர்பில் எந்தத் தகவலையும் மறைக்கப் போவதில்லை எனவும், அனைத்துத் தகவல்களும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கைக்கு தேவையான மருந்துகளின் பட்டியல் ஏற்கனவே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.