மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாடு முழுவதும் தேயிலை தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும் என தேயிலை தொழிற்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த அபாயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஐந்நூறு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தேயிலை துாள் உற்பத்தி வெகுவாக குறைந்து வருமானம் குறைந்துள்ள இவ்வேளையில் மின்கட்டணத்தை அதிகப்படுத்தினால் தேயிலை கைத்தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரப் பிரச்சினை மற்றும் காலநிலை காரணமாக தேயிலை தூள் உற்பத்தி குறைந்துள்ளது.
மின் கட்டண உயர்வுக்கு நாடு முழுவதும் தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் அரசிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர்.
இந்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை நேற்று (9) அங்கீகாரம் வழங்கியுள்ளது.