நீதிமன்ற உத்தரவை மீறி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட 18 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றிரவு (பெப்.11) யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,உள்ளிட்ட குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், இந்த குழுவினர் நேற்றைய தினம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.