சமாதான சகவாழ்வுப் பணியில் 23 ஆண்டுகள்: சமன் செனவிரத்னவுக்கு புத்தளம் சர்வமத அமைப்பு கௌரவம்!

Date:

சென்ற 14.06.2023 புதன்கிழமை புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் உறுப்பினர்களுக்கான ஒன்று கூடலும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளராக கடந்த 23 ஆண்டு காலமாக பணியாற்றிய திரு.சமன் செனவிரத்னவின் பிரியாவிடை நிகழ்வும் பாலாவியில் அமைந்துள்ள ஒடப் மண்டபத்தில் நடைபெற்றது.

புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் திட்டமிடல் அமர்வாக முழுநாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற இந் நிகழ்வில், முதல் அம்சமாக, தேசிய சமாதான அமைப்பின் ஊடாக 23 ஆண்டு காலமாக இலங்கைத் தீவில் சமாதானம் மற்றும் நல்லிணக்கப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டு, விடைபெறுகின்ற திரு சமன் செனவிரத்ன அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

இவ் வைபவத்தில் சர்வமத அமைப்பின் மதகுருமார்களான புத்தியாகம ரத்ன தேரர், இந்து மத குருக்களான சதிதர சர்மா மற்றும் பால நாதன் , அருட்தந்தை ஜெயராஜ் , அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் ஆகியோரும் இவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட இன்னும் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் அதிதியாக புத்தளம் மாவட்ட செயலகத்தின் அரசுசாரா நிறுவனங்களின் இணைப்பதிகாரியாக கடமையாற்றுகின்ற நாலக்க கருணா தாசன் அவர்கள் கலந்துகொண்டார்.

கடந்த 23 ஆண்டுகாலமாக இந்நாட்டில் சமாதானத்தை முன்னெடுப்பதற்காக தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியை கழித்த சமன் செனவிரத்ன அவர்கள்,கலாநிதி ஜெஹான் பெரேராவை தலைவராகக் கொண்ட தேசிய சமாதானப் பேரவையின் மூலமாக நாட்டின் பல்வேறு பாகங்களுக்கும் தொடராக பயணங்களை மேற்கொண்டு இந்நாட்டின் புரையோடிப் போயிருக்கின்ற இனவாதத்தை இல்லாமல் ஒழிப்பதற்கும் மக்கள் மத்தியில் இணக்கப்பாடான செயற்பாடுகளை உருவாக்குவதற்கும் மதம் கடந்து மனிதாபிமானத்தை கட்டியெழுப்புவதற்கும் தன்னுடைய திறமையையும் அறிவையும் ஆற்றலையும் தலைமைத்துவப் பண்புகளையும் முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர்.

அந்தவகையில், புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்போடு மிக நெருக்கமாக செயற்பட்டு, மாவட்ட சர்வ மத அமைப்பு மூலமாக இப்பகுதியில் இவ்வாறானதொரு செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அவர் மேற்கொண்ட பங்களிப்பை கொளரவிக்கும் வகையில் இப் பிரியாவிடை வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ்வைபத்தில் மாவட்ட சர்வ மத அமைப்பு சார்பாக திரு. சமன் செனவிரத்ன அவர்களுக்கான நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதோடு தனிப்பட்ட வகையிலும் நினைவுச்சின்னங்களும் பொன்னாடையும் போர்த்தி கௌரவித்தனர்.

சமாதானம், சகவாழ்வு,நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட தூரப் பயணம். அதற்கு இத்தகைய அர்ப்பணிப்போடு செயற்படுகின்ற மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். அத்தகைய முன்மாதிரிமிக்க மனிதர் என்ற வகையில் திரு.சமன் செனவிரத்னவை புத்தளம் சர்வ மத அமைப்பு கௌரவித்திருப்பது பொருத்தமான செயற்பாடாகும்.

இவ் வைபவத்தை தொடர்ந்துஅடுத்த 5 ஆண்டுகளுக்கான மூலோபாயத் திட்டங்கள் வகுப்பது தொடர்பான செயலமர்வு திரு.சமன் செனவிரத்ன தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் அமைப்பின் இணைப்பாளர் திருமதி முஸ்னியா நெறிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சுகவீனமுற்றுள்ள புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் மாவட்ட உலமா சபையின் தலைவருமான அஷ்ஷேய்க்.அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களை பார்வையிடுவதற்காக திரு.சமன் அவர்களும் குழுவினரும் விஜயம் செய்தனர்.

இதன் போது அஷ்ஷேய்க்.அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் திரு.சமன் செனவிரத்ன அவர்களுக்கு ஓர் அழகிய நினைவுச்சின்னத்தை வழங்கி வைத்தார்.சுகவீனமுற்று இருக்கின்ற சமூக செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான நமாஸ் ஆசிரியரையும் குழுவினர் பார்வையிட்டதோடு சமாதானப் பேரவையினால் வெளியிடப்பட்ட வெளியீடுகளையும் அன்பளிப்பு செய்தனர்.

தூய்மையான சமாதானமும் சகவாழ்வும் மேலோங்கிய ஒரு இலங்கைத் தீவுக்காக நாம் அனைவரும் கைகோர்ப்போமாக!

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...