பாலஸ்தீனத்தின் காஸா நிலப்பரப்பில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாக ஈவிரக்கமற்ற விதத்தில் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு வருவதையும் அதன் மூலம் நோயாளிகள், குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என வித்தியாசமின்றி சாதாரண பொதுமக்கள் அநியாயமாகக் கொலை செய்யப்படுவதையும் இந்த அட்டூழியத்துக்கு மேற்கு நாடுகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதையும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வன்மையாகக் கண்டிக்கிறது.
முதலாம் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து அப்போது பாலஸ்தீன் மீது ஆதிக்கம் செலுத்திய பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலக ஸியோனிஸ இயக்கத்துடன் இணைந்து உலகெங்கிலும் சிதறி வாழ்ந்த யூதர்களை பாலஸ்தீனத்தில் குடியமர்த்தியது. 1947ல் இஸ்ரேல் என்ற நாட்டை பாலஸ்தீன பூமிக்குள் திணிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானமெடுத்தது. அப்பிரதேசத்தில் வாழ்ந்த பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டனர்.
1967 ஆம் ஆண்டு யுத்தத்தில் இஸ்ரேல் கிழக்கு ஜெரூஸலம், காஸா, மேற்குக் கரை போன்ற பாலஸ்தீனின் எஞ்சிய பிரதேசங்களையும் அபகரித்துக் கொண்டதோடு சிரியா, எகிப்து ஆகிய நாடுகளின் நிலப்பிரதேசங்களை ஆக்கிரமித்து தனது நாட்டின் எல்லையை விஸ்தரித்துக் கொண்டது. தொடர்ந்தும் தாம் அபகரித்த நிலத்தில் புதிய குடியேற்றங்களை அமைத்து பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த குறுக்காக நீண்ட மதில்களை அமைத்து பாலஸ்தீன மக்கள் வாழும் பிரதேசங்களை சிறைச்சாலைகளாகவே மாற்றியுள்ளது. இத்தனை அநியாயங்களுக்கு மத்தியிலும் மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு பக்கபலமாகவே இருந்து வருகின்றன.
பாலஸ்தீன மக்கள் கடந்த 75 வருடங்களாக தமது சொந்த நாட்டில் திறந்த சிறைச்சாலையில் வாழும் அவலநிலை தொடர்கின்றது. நாடற்ற நிலையில் இருந்த யூதர்களுக்கு அபகரித்துக் கொடுக்கப்பட்ட பாலஸ்தீனில் அதன் சொந்த மக்கள் இன்று அடிப்படை மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய தேவைகளைக் கூட அடைந்து கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது உலகப் படத்திலேயே இல்லாதிருந்த இஸ்ரேல் இன்று பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து அகன்ற இஸ்ரேலாக மாறியுள்ளது. நிரந்தர அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களின் பொறுமை எல்லை கடந்து இஸ்ரேலைத் தாக்கும் போது அது பயங்கரவாதமாகப் பார்க்கப்படுகின்றது.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அதன் யுத்த குற்றங்களுக்கு எதிராகவும் ஐ.நா. பொதுச் சபை பல தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அவை பயனற்றுப் போவதற்குப் பிரதான காரணம் அமெரிக்கா ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு வழங்கும் நிபந்தனையற்ற ஆதரவாகும்.
இந்த விவகாரத்தில் மேற்கத்திய ஊடகங்களின் பக்கச் சார்பான போக்கும் கண்டிக்கத்தக்கதாகும். அதேவேளை, மேற்கத்திய ஊடகங்களின் பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் மேற்கு, கிழக்கு என்ற வித்தியாசமின்றி; பாலஸ்தீனில் நீதிகோரி உலகெங்கும் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் நம்பிக்கையூட்டுவதும் பாராட்டப்பட வேண்டியதுமாகும்.
பாலஸ்தீன் மக்களின் இத்துயர நிலை தொடர்வது நியாயமானதல்ல. அவர்களின் 75 வருட சிறை வாழ்க்கை முடிவுக்கு வரவேண்டும். தமது சொந்தப் பூமியில் பாலஸ்தீன அரசை அமைத்து உலகின் ஏனைய மக்களைப் போன்று அவர்களும் சராசரி குடிமக்களாக வாழும் நிலை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இது மனிதாபிமானத்தை விரும்பும் ஒவ்வொரு உலகப் பிரஜையினதும் கடமையும் பொறுப்புமாகும்.