நோ அதர் லேண்ட் படத்தின் மற்றொரு இயக்குனர் யுவல் ஆபிரகாம் இந்த தகவலை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“எங்கள் ‘நோ அதர் லேண்ட்’ படத்தின் இணை இயக்குநரான ஹம்தான் பிலால், இஸ்ரேலிய இராணுவத்தால் தாக்கப்பட்டார். இதன் காரணமாக அவருக்கு தலை மற்றும் வயிற்றில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது” என்று தனது சமூக ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹம்தானை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து கொண்டு சென்றனர் என்று அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடியேறிகள் தாக்குதலின்போது ஹம்தான் பிலாலுடன் இருந்த யுவல் ஆபிரகாமும் காயமடைந்துள்ளார்.
“ஹம்தான் எங்கே இருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை, ஏனென்றால் அவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்,” என்று சம்பவ இடத்தில் இருந்த ஜோஷ் கிமல்மேன் என்பவர் ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்த ஆண்டு சிறந்த ஆவணப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்ற நோ அதர் லேண்ட் படம், இஸ்ரேலிய இராணுவத்தால் தங்கள் கிராமங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் மேற்கு கரை மசாஃபர் யட்டா குடிமக்களின் போராட்டத்தை சித்தரிக்கிறது.
இந்த படத்தை மசாஃபர் யட்டாவைச் சேர்ந்த பலஸ்தீனிய இயக்குநர்கள் ஹம்தான் பிலால் மற்றும் பாஸல் அட்ரா மற்றும் இஸ்ரேலிய இயக்குநர்கள் யுவல் ஆபிரகாம், ரேச்சல் ஸ்ரோர் ஆகிய 4 பேரும் சேர்ந்து இயக்கியுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் ஹம்தான் பிலால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.