உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம் கடந்துள்ள நிலையில், சுமார் 50 உள்ளூராட்சி சபைகளில் பல்வேறு காரணங்களினால் இதுவரை ஆட்சியமைக்க முடியாது போயுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால், அந்த உள்ளூராட்சி சபைகளில் இதுவரை மக்களுக்கான சேவைகளை ஆரம்பிக்க முடியாமல் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபை அமர்வுக்கு தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர் இல்லாமை, உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படாமை, சில நீதிமன்ற உத்தரவு உள்ளிட்ட காரணங்களினால் மேற்படி உள்ளூராட்சி சபைகளில் இதுவரை ஆட்சியமைக்க முடியாதுள்ளதாக அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன குறிப்பி்ட்டுள்ளார்.
அந்த சபைகள் கூடுவதற்கு முழுமையான உறுப்பினர்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 50 வீதமானோர் சமூகமளிப்பது அவசியமெனவும், எனினும் சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே சபைக்கு வருகை தருவதை தவிர்த்து வருகின்றமையால், உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வனாத்தவில்லு பிரதேச சபையில் பெண் பிரதிநிதித்துவம் சம்பந்தப்பட்ட சிக்கல் காரணமாக இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையால், அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.j