அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ. எம். பாரூக் இன்று காலமானார். சமூக சேவைக்கும், இளைஞர் முன்னேற்றத்திற்கும் தனது முழு வாழ்நாளையும் அர்ப்பணித்த தலைவரின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.
இவரது மறைவுக்கு மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) தலைவர் மு. தமிமுன் அன்சாரி தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ.எம்.ஃபாருக் அவர்கள் இன்று கொழும்புவில் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
இளைஞர்களை ஒருங்கிணைப்பதிலும், அவர்களை சேவைகளின் பக்கம் வழி நடத்துவதிலும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு தலைவராக அவர் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
நான் இலங்கைக்கு சென்ற போது கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில், தற்போதைய தலைவர் ஷாம் அவர்களுடன் சந்தித்து உரையாடியது நினைவில் இருக்கிறது.
கடந்த கால அனுபவங்களையும், நிகழ்கால சவால்களையும் கவனத்தில் கொண்டு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து நாங்கள் உரையாடினோம்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அக்கட்சியினருக்கும், நண்பர்களுக்கும், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்
