பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் தொடபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு,
கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நிலையில் நேற்றையதினம் பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
