அவசரகால மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்குவதற்கு உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளது என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உலக வங்கி அதிகாரிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவசரகால மருந்துகள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இரண்டு வாரங்களுக்குள் உலக வங்கி மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை இந்திய கடன் உதவியை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உலக வங்கியிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், கடன்களை மறுசீரமைப்பது குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து உத்திகளும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.