நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 11 திங்கட்கிழமை புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கவுள்ளது.
ஆளும் கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், நள்ளிரவு வாக்கெடுப்பு, பிரதமர் பதவி விலகல், புதிய பிரதமராகவிருக்கு ஷெபாஸ் ஷெரீப், லண்டனிலிருந்து தாயகம் திரும்பும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் என பாகிஸ்தானின் பரபரப்புக்கான பட்டியல் நீண்டு கொண்டே செல்வதாக இஸ்லாமபாத் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு பாகிஸ்தானின் பெரு நகரங்கள் பலவற்றிலும் இம்ரான் கானுக்கு ஆதரவாக பேரணிகள் நடந்தன.
ரமழான் நோன்பை முடித்துவிட்டு பெரும்பாலானோரும் பேரணியைத் தொடங்கினர். இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது. ஆதலால், இளைஞர்கள் அதிகளவில் பேரணியில் கலந்து கொண்டனர்.
கராச்சி நகரில் மட்டும் 20,000 பேர் இம்ரான் கானுக்கு ஆதரவாகத் திரண்டிருந்தனர்.
இந்தப் போராட்டங்கள் குறித்து இம்ரான் கான், ‘பாகிஸ்தான் வரலாற்றில் இப்படியொரு கூட்டம் தானாகக் கூடியதில்லை. இது வெகு இயல்பாகத் திரண்ட கூட்டம்.
இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சியை எதிர்த்து திரண்ட கூட்டம் இது’ என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக நேற்று தனது பிரதமர் பதவி பறிபோன பின்னர் ட்விட்டரில் இம்ரான் கான் இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கிவிட்டதாகப் பதிவிட்டிருந்தார்
.
அதில் அவர், ‘பாகிஸ்தான் 1947ல் சுதந்திர நாடானது. ஆனால் இப்போது இன்று இன்னொரு சுதந்திரப் போராட்டம் தொடங்கியுள்ளது. இந்தப் போராட்டம் பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய வெளிநாட்டு சதிக்கு எதிரானது.
பாகிஸ்தானின் மக்கள் தான் எப்போதும் நாட்டின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் காவலர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை பெருந்திரளாக மக்கள் கூடி இம்ரான் கானுக்கு ஆதரவு தெரிவித்தனர்.