சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர்.
அதற்கமைய புதிய விவசாய அமைச்சராக இன்று (11) ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான சாந்த பண்டார, அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுதந்திரமாகச் செயற்பட்ட எம்.பி.க்கள் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.