நுகேகொடை- மிரிஹானவில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதேநேரம், ஆர்ப்பாட்டக்காரர்கள் யாரேனும் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சாதாரண சட்ட விதிகளின் கீழ் குற்றஞ்சாட்ட முடியும் எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நேற்றைய போராட்டம் குறித்த தகவல்களை ஆணைக்குழு சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என்று மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் கலாநிதி நிமல் கருணாசிறி, தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எமது ஆணைக்குழுவைச் சேர்ந்த ஆறு பேர் அந்தப் பகுதிக்கும் மிரிஹான பொலிஸ் நிலையத்துக்கும் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் உட்பட அனைத்தையும் கண்காணித்து காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.
நாங்கள் ஒரு அறிக்கையைத் தொகுத்து, சம்பவம் குறித்து நிலைமையை அறிக்கையாக வெளியிடுவோம், ‘என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவார்கள் என மிரிஹான பொலிஸ் நிலைய சட்டத்தரணிகளுக்கு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பாக இருக்கும் விதிகளில் உள்ளமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு, அது அரசால் அதன் விருப்பப்படி துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கிறது,’ என்று அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.