எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிசை இன்றுடன் நிவர்த்தி செய்யப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து பெற்றோல் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுமித் விஜேசிங்க சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்திய கடன் உதவியின் கீழ் கப்பல் கொண்டு வந்த பெற்றோல் அளவு 40,000 மெட்ரிக் தொன் ஆகும். பெற்றோல் விநியோகமும் தொடங்கியுள்ளது.
அதன்படி, பெற்றோல் வரிசைகள் இன்று முதல் நீக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போது நாடு முழுவதும் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எதிர்வரும் 12ஆம் திகதி டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. தற்போதுள்ள டீசல் இருப்புக்களை முறையான நிர்வாகம் மூலம் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இன்று காலையிலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது. நேற்றிரவும் எரிபொருள் நீண்ட வரிசையில் காணப்பட்டதாக அறியமுடிகின்றது.
அத்தோடு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதிலும் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை காணமுடிந்தது.
சற்று நேரத்திற்கு முன்னர் இருந்ததைப் போன்று நேற்று இரவும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.