2022 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையேற்றம் அதிகமாக இருக்கும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் அடங்குகின்றது.
அதேநேரம், அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில், ஆண்டு அடிப்படையில் 91வீதத்துடன் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உணவுப் பணவீக்கம் குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையின்படி, உலகில் அதிக பெயரளவிலான உணவுப் பணவீக்கத்துடன் இலங்கையை விட முன்னணியில் உள்ள நாடுகள் சிம்பாப்வே, லெபனான் மற்றும் வெனிசுலா ஆகும்.
ஆகஸ்ட் மாதம் உணவுப் பணவீக்கம் குறித்து உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், உலகிலேயே அதிக பெயரளவில் உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்த அறிக்கையில், கடந்த முறை நான்காவது இடத்தைப் பிடித்திருந்த துருக்கியை வீழ்த்தி இலங்கை நான்காவது இடத்தைப் பெற்றது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 53 நாடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 45 நாடுகளில் 205.1 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடியால் பாதிக்கப்படுவார்கள் அல்லது அவர்கள் எதிர்கொள்ளும் உணவு நெருக்கடி மோசமாகிவிடும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, இலங்கையின் பெயரளவிலான உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உளளது.
இலங்கைக்கு அடுத்தபடியாக முறையே துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகள் உள்ளன.