துருக்கியின் பார்டின் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இது வரையில் 41 வரை பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை துருக்கியின் கருங்கடல் கரையோர மாகாணமான பார்ட்டினில் அமாஸ்ரா நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான டிடிகே அமாஸ்ரா மியூசிஸ் முதுர்லுகு நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த சுரங்கத்தில் 150-க்கும் மேற்பட்டோர் நாள்தோறும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் ஒரு பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தின் போது சுரங்கத்தில் இருந்த தொழிலாளர்கள் சிலர், சிக்கி கொண்டனர். பின்னர் இதுகுறித்து மீட்புக்குழுவினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதில், சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்ட 11 பேர் வெளியேறிய நிலையில், சிலரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
மேலும் மீத்தேன் வாயு வெடித்ததே விபத்துக்கான காரணம் என்று முதற்கட்ட தகவலும் வெளியானது.
300 முதல் 350 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் 50 தொழிலாளர்களை மீட்கும் பணி மூன்றாம் நாளாக தொடருகிறது.
மீட்புப் பணியை ஒருங்கிணைக்க அமஸ்ராவுக்குச் சென்ற உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு, 40 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்ததை உறுதி செய்தார்.
இதேவேளை அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் ஃபாத்திஹ் டோன்மேஸ், வெடிப்பு இடம்பெற்ற அமாஸ்ராவுக்குச் சென்றார். இதன்போது, நிலக்கரிச் சுரங்கங்களில் காணப்படும் எரியக்கூடிய வாயுக்கள் கொள்கலனால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட மதிப்பீட்டில் சுட்டிக்காட்டினார்.
மேலும் நாங்கள் எங்கள் குடும்பங்கள், எங்கள் அனைத்து நிறுவனங்களுடனும் ஒன்றிணைந்திருக்கின்றோம், இதுபோன்ற வேதனையான அனுபவங்களை கடவுள் தடுக்கட்டும் என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்கத்திற்கு வெளியே இரவு முழுவதும் குளிரில் காத்திருந்தனர். வெள்ளிக்கிழமை மாலை வெடித்த நேரத்தில் 110 சுரங்கத் தொழிலாளர்கள் பூமிக்கு பல நூறு மீட்டர் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர்.
மேலும், குறைபாடுகள் அல்லது தேவையற்ற அபாயங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், “சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்காது. சிக்கி இருப்பவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதே இலக்கு. உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி சுரங்க விபத்தில் பலியான ரஹ்மான் ஓசெலிக் (22) க்கான இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார். அங்கு மூன்று சுரங்கத் தொழிலாளர்களும் துக்கம் அனுசரிக்கப்படுவதாக துருக்கிய ஊடகங்கள் தெரிவித்தன.
இதேவேளை, எர்டோகன் தென்கிழக்கு நகரமான தியார்பாகிருக்கு திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்துவிட்டு, மீட்பு நடவடிக்கையை ஒருங்கிணைக்க அமாஸ்ராவுக்குப் பயணம் செய்தார்.
ஆண்டுக்கு 300,000 முதல் 400,000 டன் நிலக்கரி உற்பத்தி செய்யும் அமஸ்ரா சுரங்கத்தில் சுமார் 600 தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிழக்கு துருக்கியின் சோமானகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, இதே போன்று ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது. அப்போது அந்த விபத்தில் சிக்கி சுமார் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, சிலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.