இம்மாதம் 22 ஆம் திகதி சவூதியில் ரமழான் மாதத்தின் ஆரம்பம் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ரமழான் காலத்தில் பேணப்பட வேண்டிய விதிமுறைகளை சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் கடந்த வெள்ளியன்று அறிவித்துள்ளார்.
சவூதியின் இஸ்லாமிய விவகாரங்கள், தஃவா மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சர் கலாநிதி அஷ்ஷேக் அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் அல் அல்ஷேக் அவர்களினால் பள்ளிவாசல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ரமழானில் பள்ளிவாசல்கள் கடைப்பிடிக்க வேண்டிய 10 விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளார்.
- பள்ளிவாசல்களின் இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் ரமழான் காலத்தில் தினமும் உரிய நேரத்துக்கு கடமைக்கு சமுகமளிக்க வேண்டும்.
- உம்முல் குரா கலண்டரின் அடிப்படையில் இஷாத் தொழுகையினதும் ஏனைய தொழுகையினதும் அதான் அமைய வேண்டும்.
- தொழுகையாளிகளுக்கு கஷ்டம் ஏற்படாத வகையில் தராவீஹ் தொழுகை மற்றும் இறுதிப் பத்தின் கியாமுல் லைல் தொழுகைகளின் நேரத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
- தராவீஹின் குனூத் துஆக்கள் நீட்டப்படாமல் இறைதூதரின் வழிகாட்டலில் உள்ளவாறான ஜவாமிஉத் துஆவாக மட்டுமே அமைய வேண்டும். உணர்வுகளைத் தூண்டும் வகையிலான ஓசைநயங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
- சுற்றறிக்கைகள் மூலம் ஒழுங்குபடுத்தித் தரப்பட்டுள்ள முக்கியமான புத்தகங்களையும் ரமழானில் வாசிக்க வேண்டும்.
- தொழுகை நடைபெறும் போது இமாமையோ தொழுகையாளிகளையோ ஒளிப்பதிவு செய்வதையும் ஊடகங்களில் ஒளிபரப்புச் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
- இஃதிகாப் இருப்பவர்களுக்கான முழுப் பொறுப்பையும் இமாம் பொறுப்பேற்க வேண்டும். உள்நாட்டவரானால் இஃதிகாப் இருப்பவர் தனது அடையாள அட்டையையும் வெளிநாட்டவரானால் ஸ்பொன்ஸரின் அங்கீகாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- பள்ளிவாசலில் இப்தாருக்கான நிதி திரட்டல்கள் இடம் பெறக் கூடாது
- பள்ளிவாசல்களில் இப்தார் நடத்தக் கூடாது. பள்ளிவாசலுக்கு வெளியில் அதற்கென ஒதுக்கப்படுகின்ற வெளிப்புறங்களிலேயே இப்தார் நடத்தப்பட வேண்டும். அங்கும் தற்காலிக கொட்டகைகளோ அறைகளோ அதற்கென அமைக்கக் கூடாது.
- தொழுகையாளிகளுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் தொழுகையிலான அவர்களின் கவனத்தை கலைக்கும் என்பதாலும் தொழுகைக்கு சிறுவர்களை அழைத்து வருவதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.