பிராணிகளின் விலை அதிகம் : தேச நலனை முன்னிறுத்தி குர்பானியை இடைநிறுத்திய மொரோக்கோ அரசு

Date:

இம்முறை ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு பிராணிகளை குர்பான் கொடுப்பதை நிறுத்துமாறு மொரோக்கோ அரசாங்கம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மொரோக்கோவில் 7ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

மொரோக்கோவில் குர்பானிக்கான பிராணிகளில் பிரதானமானதாக செம்மறியாடுகளே காணப்படுகின்றன. கடந்த 7 வருடங்களாக நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் மொரோக்கோவின் செம்மறியாடுகளின் எண்ணிக்கை 38 வீதத்தினால் குறைந்துள்ளது.

இதனால் ஆடுகளின் விலை மக்களால் சுமக்க முடியாதளவு உயர்ந்துள்ளதாலும், எஞ்சியுள்ள பிராணிகளை அறுப்பதனால் விவசாயம் பாதிக்கப்படும் என்பதனாலும் இந்த முடிவை மக்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என மொரோக்கோ மன்னர் 6ம் முஹம்மத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மொரோக்கோவின் மன்னர் மார்க்கத் தீர்ப்பு வழங்கக் கூடிய அமீருல் முஃமுனீனாகக் கருதப்படுகின்றார், தற்போதைய மன்னர் 6ஆம் முஹம்மதின் ஆட்சிக் காலத்தில் முதற்தடவையாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 3 தடவைகள் இவ்வாறான உத்தரவை மன்னர்கள் பிறப்பித்துள்ளனர்.

மொரோக்கோவில் தனி நபர் ஒருவரின் சராசரி மாத வருமானம் 335 டொலர்களாக இருக்கும் நிலையில் செம்மறி ஆடொன்றின் விலை 600 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.

“இந்தக் கடினமான சூழ்நிலைகளில் குர்பானி கொடுப்பது நம் மக்களில் பலருக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு உண்மையான தீங்கு விளைவிக்கும் எனவும் இதனால் இம்முறை குர்பானியை நிறுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்குமாறும் மன்னர் 6ம் முஹம்மத் இஸ்லாமிய விவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

மொரோக்காவில் ஒவ்வொரு ஹஜ் காலப்பிரிவிலும் அண்ணளவாக 230,000 ஆடுகள் அறுக்கப்படுகின்றன. இந்த நிலையில் மன்னரின் இந்த அறிவிப்பினை  பொருளியல் வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.

“எங்கள் கால்நடை எண்ணிக்கை 2027 க்கு முன்பு முழுமையாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, எனவே இந்த முடிவு தேசிய தேவையை அடைந்து கொள்ள உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். மன்னரின் இந்த அறிவிப்பு பொது மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அத்தியாவசியமாக குர்பானி கொடுக்க வேண்டியவர்கள் மன்னரின் அனுமதியுடன் குர்பானி கொடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் அறுக்கப்படும் பிராணியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தவிர்ந்து கொள்ளுமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குர்பானிக்காக பிராணிகளை விற்பதற்குக் காத்திருந்த பண்ணையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அவர்களுக்கு மானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 7 இலட்சம் திர்ஹம்களை ஒதுக்கியிருப்பதாக விவசாய அமைச்சர் அஹமத் அல் புவாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக் கூடிய 50,000 பண்ணையாளர்களின் கடனை தள்ளுபடி செய்வதாகவும், அறுப்பதற்குக் கொடுக்காத பெண் ஆடுகள் ஒவ்வொன்றுக்கும் 400 திர்ஹம்கள் நஷ்ட ஈடாக வழங்குவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மன்னரின் முடிவு நாட்டின் நலனை முன்னோக்கி எடுக்கப்பட்டிருக்கிறது, இந்த முடிவை நாங்கள வரவேற்கிறோம் என பொதுமக்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...