நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர் 3ஆம் திகதி முதல் வழங்கியிருப்பதாக இலங்கை காதி நீதவான்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் இப்ஹாம் யஹியா அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை கொழும்பு வடக்கு, காத்தான்குடி மண்முனைப்பற்று மாஹோ, மாத்தளை, மாவனல்லை, புத்தளம் மற்றும் சிலாபம் சம்மாந்துறை, பாத்ததும்பறை உடதலவின்ன, உடுநுவர, ஆகிய பிரதேசங்களுக்கே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதுதொடர்பான நேர்முகப்பரீட்சை இடம்பெற்றதைத் தொடர்ந்து இப்பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காதி நீதிபதியின் இடத்திற்கு புத்தளம் சிலாபம் காதி நீதிபதியாக புத்தளம் நாகவில்லு பகுதியைச் சேர்ந்த என்.அஸ்மீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இச்செய்தியின் மூலம் தெரியவந்துள்ளது.
இதேவேளை மாவனல்லை பிரதேச காதி நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.எஸ்.எம்.தாலிப் என்பவர் சுகவீனம் காரணமாக தன்னால் இப்பதவியை ஏற்றுக்கொள்ள முடியாதென்று தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ளார்.

