மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அதற்காக ரூ. 10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கான பொறுப்பு பாராளுமன்றத்திற்கே உள்ளது என்றும், பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் இணைந்து சரியான தேர்தல் முறையை உருவாக்கித் தந்தால் நாம் தேர்தல் நடத்தத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இந்த வருடத்தில் தேர்தல் நடத்தும் எதிர்பார்ப்பிலேயேரூ. 10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (07) 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தும் போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
”மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டம் ஒன்று உள்ளதுஹ எனினும் எல்லை நிர்ணய நடவடிக்கைகள் முடிவடையவில்லை. உங்களது அரசாங்கத்தில் எல்லை நிர்ணய சட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியும். எனினும் நீங்கள் அதை செய்யவில்லை. தயாசிறி ஜயசேகரவும் அப்போது அமைச்சராக இருந்தார். எல்லை நிர்ணய அறிக்கையை சமர்ப்பித்த போது இந்த நாட்டில் முதலாவது தடவையாக அதனை சமர்ப்பித்த பைசர் முஸ்தபா அமைச்சரே அதற்கு எதிராக கையுயர்த்தினார். அமைச்சரே கொண்டு வந்த அறிக்கையை அவரே தோற்கடித்தார் என்பதே விந்தை.
இப்போது எம்மிடம் மாகாண சபைத் தேர்தலை கேட்கின்றனர். இப்போது சட்டத்தில் இடமில்லை. நான் சட்டமா அதிபரிடம் அதற்காக சட்டத்தில் காணப்படும் இடம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு கேட்டுள்ளேன். விருப்பு வாக்கு தேர்தல் முறை வேண்டாம் என இங்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதை அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்த வரவு செலவுத் திட்டத்தில் நாம் ரூ. 10 பில்லியனை தேர்தலை நடத்துவதற்காக ஒதுக்கியுள்ளோம். தேர்தலை எப்போது நடத்துவது என்பது நான் தீர்மானிக்க முடியாது.
