ஜும்ஆ பிரசங்கங்களில் நடுநிலையையும், சமூகப் பொறுப்பையும் கடைப்பிடியுங்கள்; முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் புதிய வழிகாட்டல்.

Date:

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்படும் ஜும்ஆ பிரசங்கங்களின் போது,  சர்வதேச விவகாரங்கள் குறித்துப் பேசுகையில் நடுநிலைமையையும் சமூகப் பொறுப்பையும் பேணுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக சில இடங்களில் இடம்பெற்ற ஜும்ஆ பிரசங்கங்களின் போது, மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் பல்வேறு முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் யுத்த சூழ்நிலை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சின் ஊடாக எமது திணைக்களத்திற்கு 2026 மார்ச் மாதம் 19 ஆம் திகதியிடப்பட்டு விடுக்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைய இவ்வழிகாட்டல் வெளியிடப்படுகின்றது.

இலங்கை ஒரு இறையாண்மையுள்ள நாடு என்ற ரீதியில், சர்வதேச விவகாரங்களில் நடுநிலைமையைப் பேணுவதை தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இத்தருணத்தில், உள்நாட்டில் அமைதியைப் பாதுகாப்பதும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதும் நமது தலையாய கடமையாகும். எனவே, ஜும்மா பிரசங்கங்களை நிகழ்த்தும் உலமாக்கள் பின்வரும் வழிகாட்டல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:

சமூகப் பொறுப்பு மற்றும் நடுநிலைமை: மத்திய கிழக்கு மோதல்கள் தொடர்பில்

உரையாற்றும் போது, எந்தவொரு தரப்புக்கும் சார்பாகவோ அல்லது எந்தவொரு தரப்புக்கும் எதிராகவோ கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்கள் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இதில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும்.

பொருளாதார ஒத்துழைப்பு: நாட்டின் தற்போதைய பொருளாதார சவால்களைக் கருத்திற் கொண்டு, உள்நாட்டில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இறையாண்மைக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மனிதாபிமானப் பிரார்த்தனைகள்: இந்த யுத்தத்தினால் அநியாயமாகப் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்காகவும், அவர்களின் சுபிட்சத்திற்காகவும், அந்தப் பிரதேசங்களில் நீடித்த சமாதானம் ஏற்படவும் விசேட பிரார்த்தனைகளை முன்னெடுத்தல்.

உலகளாவிய சமாதானம்: உலக மக்கள் அனைவரும் தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு, சகல இன மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுதல்.

இலங்கை அரசு சர்வதேச விவகாரங்களில் நடுநிலைமைக் கொள்கையைப் பின்பற்றி வருவதால், உள்நாட்டில் மத நல்லிணக்கத்தைப் பேணுவது அவசியம் எனத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இந்த வழிகாட்டல்களை அனைத்துப் பள்ளிவாசல்களும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 66,064...

அங்காரா நேட்டோ உச்சிமாநாடு 2026: உலகளாவிய பாதுகாப்பு சவால்களுக்கு மத்தியில் முக்கிய முடிவுகள்!

உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும்...

அன்று ஹிஜாப் அணிந்த துருக்கி பெண் அமைச்சரை சிறைபிடித்து துரத்திய நெதர்லாந்து: 2017 அவமதிப்புக்கு 2026-ல் துருக்கி கொடுத்த தரமான பதிலடி

துருக்கி ஜனாதிபதி ரெசப் தயிப் அர்தூகானின் தீர்க்கமான இராஜதந்திரம் மற்றும் அவரது...